கன்னியாகுமரி,
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 21ந்தேதி தொடங்குகிறது.
முன்னதாக 20-ந் தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக நடக்கும் கொடிமரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 21-ந்தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த திருவிழா 30-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 29-ம் தேதி நடைபெற உள்ளது.