பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் முருகப் பெருமானுக்கு விஷேச பூஜையும் நடக்கிறது
வருகிற 31-ந் தேதி வரை தினசரி காலை மற்றும் மாலையில் வாகன வீதியுலா நடைபெறுகிறது. சூரிய பிரபை, சந்திர பிரபை, மங்களகிரி விமானம், ஆட்டுகிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிவலம் வந்து பக்தர்களுக்குஅருள்பாலிக்க உள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, 27-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. 30-ந் தேதி காலை தீர்த்தவாரி கலசாபிஷேகமும் மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அன்று இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது. 31-ந் தேதி இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானை மற்றும் கன்னிமூல கணபதி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர், சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்படுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வாகன வீதி உலா நடைபெறும். பத்ம மயில், கேடயம், மயில், மஞ்சம், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு ரத வீதியிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 30-ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைகிறது. அதனை தொடர்ந்து 31-ம் தேதி ஞாயிற்றுகிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. ஜூன் 1-ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவாச்சரியர்கள், மண்டகபடிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.