கன்னியாகுமரி,
உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 30-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
6-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு பக்தி பஜனையும் நடந்தது. அதன்பிறகு 8 மணிக்கு பரதநாட்டியம் நடந்தது. பின்னர் பகவதி அம்மன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் எழுந்தருளி நாதஸ்வரம், கேரள பஞ்சாரி மேளம் உள்பட பலவகையான மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்து பந்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி, சன்னதி தெரு, கன்னியம்பலம் மண்டபம், பிள்ளையார் கோவில் தெரு, நடுத்தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி , கீழரத வீதி வழியாக மீண்டும் கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது.
அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறினார். அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது.
வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் வக்கீல்சிவகுமார் நாகப்பன், செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் நாயகம், பொருளாளர் பப்பு, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய த.வெ.க. செயலாளர் எட்வின் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
7--வதுநாளான இன்று அதிகாலை 5மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால்,தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. பிற்பகல் 3.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.