தூத்துக்குடி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி மாதப் பிறப்பையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து மற்ற கால காலப் பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடத்தப்பட்டன.
அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள், கடலில் புனித நீராடிவிட்டு இலவச பொதுத் தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வரிசை என அனைத்து வழிகளிலும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், பாரம்பரியமாக காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மே 30-ம் தேதி வைகாசி விசாகம்:
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமான வைகாசி விசாகத் திருவிழா, இந்த ஆண்டு மே 30-ம் தேதி மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு மே 21-ம் தேதி புகழ்பெற்ற வசந்த திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் தினசரி பகல் பொழுதில், சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் சண்முக விலாச மண்டபத்திற்குச் செல்வார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வைகாசி விசாகத் திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திருச்செந்தூர் நகர் முழுவதும் தற்போதே ஆன்மீகக் களைகட்டத் தொடங்கியுள்ளது.