இந்து மதத்தின் வழிபாட்டு முறைகள், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எந்தெந்த கடவுள்களுக்கு எந்தெந்த முறையில் வழிபாடுகளை செய்ய வேண்டும், அவற்றுக்கான பலன்கள் என்ன? என்பதை முன்னோர்கள் வகுத்து அறிவுறுத்தி உள்ளனர்.
• குடும்பத்தில் தாங்க முடியாத துன்பங்களால் கவலைப்படுபவர்கள், கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
• கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீயோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
• கோவில்களில் இருக்கும் திரிசூலத்திற்கு குங்குமம் இட்டு, எலுமிச்சம் பழத்தை குத்தி வழிபட்டால் கண் திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
• குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, வெண்ணெய் சாற்றி, கோவிலை மூன்று முறை வலம் வந்து வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
• பைரவர் சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
• கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும்.
• சோமவாரமான திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் சனி பகவானின் பாதிப்பு குறையும்.
• சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் பில்லி, சூனியம் போன்றவை நீங்கும்.
• வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்து, அவரது மூல மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம்.