திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான 59 வது திவ்ய தேசமான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றவும், நோய்தீர வேண்டிக் கொள்ளவும், நோயை தீர்த்த பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாளை வணங்குவது வழக்கம்.
இந்நிலையில் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் வசந்த உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ விழா நேற்று மாலை திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் உள்ள வசந்த மண்டபத்தில் தொடங்கியது. மாலை 6 மணிக்கு கேடயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் மேளதாளம் முழங்க திருக்குளம் வீதிகள் வழியாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் 4 வீதிகள் வழியாக சுவாமி உலா வந்து கோயிலுக்குள் சென்றடைந்தார். இந்த வசந்த உற்சவம் விழா வரும் 27 ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.