வீர ஆஞ்சநேயர் 
ஆன்மிகம்

சனி தோஷம் போக்கும் வீர ஆஞ்சநேயர்

ஏழரை சனிக்காலத்தில் தன்னை பிடிக்க வந்த சனி பகவானை காலால் அழுத்தி மிதித்த திருக்கோலத்தில் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

செங்கல்பட்டு நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது கோதண்டராமர் கோவில். மிக பழமை வாய்ந்த இந்த தலம் சனி தோஷம் போக்கும் தலமாக திகழ்கிறது.

அமர்ந்த கோலத்தில் ராமர்

பொதுவாக ராமபிரான் நின்ற கோலத்தில் காட்சி தருவதே வழக்கம். ஆனால், இக்கோவிலின் கருவறையில், ஸ்ரீ ராமபிரான் "பட்டாபிராமன்" என்ற திருநாமத்தோடு, சீதா தேவியுடன் வீராசனத்தில் அமர்ந்த கோலத்தில் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார்.

அன்னையின் அருகே லட்சுமணர் நின்ற கோலத்திலும், கீழே பரதன், சத்ருக்கனன் மற்றும் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையிலும் உள்ளனர். ராமபிரானுடன் பரதனும், சத்ருக்கனனும் உடன் இருப்பது இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் மிகவும் அரிய அமைப்பாகும்.

கோவிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த ஆஞ்சநேயரின் தோற்றம் மிகவும் அபூர்வமானது. வலது கரம் அபய முத்திரை காண்பித்தபடி (பயப்படாதே என அருளும் நிலை), இடது கரம் தாமரை மலரை ஏந்தியபடி காட்சியளிக்கும் இந்த ஆஞ்சநேயர், ஏழரை சனிக்காலத்தில் தன்னை பிடிக்க வந்த சனி பகவானை காலால் அழுத்தி மிதித்தபடி உள்ளார்.

சனி தோஷம் நீங்க...

அனுமனின் பாதங்களில் சிக்குண்டு வேதனை தாங்க முடியாமல் கதறிய சனி பகவான், "ஆஞ்சநேயரே! உம்மை வணங்கும் பக்தர்களையோ, ஏன் உங்களை ஒரு கணம் நினைப்பவர்களைக் கூட நான் துன்புறுத்த மாட்டேன்!" என்று வாக்குறுதி அளித்ததால் சனி பகவானை ஆஞ்சநேயர் விடுவித்தார்.

இவ்வாறு சனி பகவானையே தன் பாதத்தில் அடக்கிய வீர ஆஞ்சநேயரை இத்தலத்தில் தரிசிப்பதன் மூலம், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி போன்ற அனைத்து விதமான சனி தோஷங்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனியின் கெடு பலன்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு பெற, இந்த வீர ஆஞ்சநேயரை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

செங்கல்பட்டு பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையத்திலிருந்து மிக அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.