சித்திரை திருவிழா - கம்பம் நடும் நிகழ்ச்சி 
ஆன்மிகம்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது

திருவிழாவின் சிகர நிகழ்வாக மே 15மற்றும் 17ம் தேதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டம் வீரபாண்டியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கவுமாரியம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படும். இது தவிர சித்திரை மாதத்தில் வருடம்தோறும் 8 நாள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி சட்டி , காவடி, ஆயிரங்கண் பானை, மாவிளக்கு, கரகம் என நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்‌.

அவ்வகையில் இந்த ஆண்டின் சித்திரை திருவிழா நேற்று 9 மணியளவில் கவுமாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக அத்தி மரத்தில் வெட்டப்பட்ட மூன்று கிளைகளையுடைய கம்பத்திற்கு, முல்லை பெரியாற்றில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் கோவிலுக்குள் அமைந்துள்ள அதற்கான பீடத்தில் கம்பம் நடப்பட்டது.

கம்பத்திற்கு பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபடுவர். கம்பம் நடப்படும் நிகழ்வைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வுகள் இன்று முதல் தொடங்க உள்ளன.

மே 12ம் தேதி அம்மன் மலர் விமானத்தில் பவனி வருதல், மே 13-ம் தேதி முத்து பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 14ம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் பவனி வரும் நிகழ்வு, மே 15மற்றும் 17ம் தேதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. 18ம் தேதி தேர் நிலைக்கு வருகிறது. மே 19-ம் தேதி அம்மனுக்கு ஊர் பொங்கல் வைக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறும்.