சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் (இடம்: நன்செய் புகளூர் மேகபாலீஸ்வரர் கோவில்) 
ஆன்மிகம்

வேலாயுதம்பாளையம்: சிவன் கோவில்களில் அஷ்டமி சிறப்பு வழிபாடு

சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.

வேலாயுதம்பாளையம்,

அஷ்டமியை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு ஆவணி மாத அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், மேகபாலீஸ்வரர், பாகவல்லி அம்பிகை மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதர் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணி பாளையம் நத்தமேட்டில் ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஆவணி மாத அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.