திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹாரம் 
ஆன்மிகம்

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..’ திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

சூரசம்ஹார நிகழ்வுகளை கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் பார்ப்பதற்கு வசதியாக, ஆங்காங்கே பெரிய எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டிருந்தன.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அதுவும் சூரனை வதம் செய்த இடம் திருச்செந்தூர் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார உற்சவம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அவ்வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் காலை யாக சாலை பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மஞ்சள் பொடி, மா பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் நடந்த தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளிய முருகப்பெருமான்

சூரசம்ஹாரம்

மாலையில் சூரபத்மன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். அன்னையிடம் இருந்து பெற்ற சக்தி வேலுடன் சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன், சூரனை வதம் செய்வதற்காக போர்க்கோலத்தில் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் 'வெற்றி வேல், வீரவேல்' என முழக்கம் எழுப்பி சுவாமியை வணங்கினர். சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். சஷ்டி விரதம் இருந்த பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

அதன்பின்னர் போர் தொடங்கியது. முதலில் மாயையே உருவான யானை முகம் கொண்ட தாரகாசுரன் தனது பரிவாரங்களுடன், முருகப்பெருமானை நோக்கி போர் புரிய அறைகூவல் விடுத்தான். இடமிருந்து வலமாக சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே வந்து நின்றான். சிறிது நேரம் போக்கு காட்டிய அவனை, முருகப்பெருமான் வதம் செய்தார். அதன் பிறகு கன்மம் உருவம் கொண்ட சிங்கமுகாசுரன், முருகனை சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகப்பெருமான் வதம் செய்தார்.

சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

சூரனை ஆட்கொண்ட சுவாமி

சகோதரர்களை தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மன் தனது படை வீரர்களுடன் வேகமாக முருகப் பெருமானுடன் போர் புரிந்தான். ஆணவத்தால் அடிபணிய மறுத்த சூரன், ஒவ்வொரு வடிவமாக எடுத்து எதிர்கொண்டான். ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியைத் தழுவிய சூரபத்மன், இறுதியாக பெரிய மாமரமாக உருமாறி நின்றான். அப்போது முருகப்பெருமான், அன்னை அளித்த சக்திவேலை ஏவி சூரனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார். சக்திவேலின் அற்புத சக்தியால் இரண்டாகப் பிளந்த மாமரத்தின் ஒரு பகுதியை தனது வாகனமான மயிலாகவும், மற்றொரு பகுதியை தனது சேவற்கொடியாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின்போது கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா" என முழக்கம் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர். சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, அதன்பின் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண கோவிலுக்கு வந்திருந்தனர். ‘கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா’ என்று நினைக்கும் அளவுக்கு, கோவில் வளாகத்தில் எங்கு திரும்பினாலும் பக்தர்களின் தலைகளாக காட்சியளித்தது. சூரசம்ஹார விழா நிகழ்வுகளை கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் பார்க்க ஆங்காங்கே கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இதேபோன்று திருச்செந்தூர்- நெல்லை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் கடலில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்கு கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டுள்ளன. மேலும் கடலில் படகுகளில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

திருக்கல்யாணம்

நாளை இரவு ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

SCROLL FOR NEXT