வித்யாரம்பம் நிகழ்ச்சி 
ஆன்மிகம்

கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி... ‘அ’ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

விஜயதசமி அன்று குழந்தைகள் தங்கள் கல்விப் பயணத்தை தொடங்கும் புனித நிகழ்வான ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் நிகழ்வுகள் வெற்றியடையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டி, விஜயதசமியையொட்டி கோவில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். விஜயதசமி தினத்தன்று குழந்தைகளின் கல்வியை தொடங்குவதே சிறந்தது என்பதற்காக இந்த நிகழ்ச்சி கோவில்களில் நடத்தப்படுகிறது.

அவ்வகையில், நவராத்திரி விழா கடந்த 11-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வந்த நிலையில், நிறைவு நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் காலை முதலே ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

பெற்றோர் மடியில் குழந்தையை அமர வைத்து, தாம்பூலம் தட்டில் அரிசியில் தாய் மொழியின் முதல் எழுத்தை குழந்தையின் சுட்டு விரலை பிடித்து கோவில் அர்ச்சகர்கள் எழுத வைத்தனர். அதன்பின்னர் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நடைமுறைகளை தொடங்கினர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் விஜயதசமி திருநாளை முன்னிட்டு கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நவராத்திரி விழாவின் 10-வது நாளான விஜயதசமி அன்று குழந்தைகள் தங்கள் கல்விப் பயணத்தை தொடங்கும் புனித நிகழ்வான ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சக்தி விநாயகர், மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவில், குசுமகிரி முருகன், பந்தலூர் பொன்னானி மகாவிஷ்ணு கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பச்சரிசியில் ‘அ’ எழுதினர்

கோவில்களில் உள்ள சரஸ்வதி தேவி மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தட்டுகளில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பச்சரிசியில், கோவில் மேல் சாந்திகள் மற்றும் பெரியோர்கள் குழந்தைகளின் விரலைப்பிடித்து தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ மற்றும் ‘ஓம்’ என எழுதி கல்வியின் தொடக்கத்தை இனிதே தொடங்கி வைத்தனர்.

இதேபோல் தங்களது குழந்தைகளுக்கு கலை மற்றும் இசை பயிற்சிகளைத் தொடங்க விரும்பிய பெற்றோர்கள், நாவில் ஊசி அல்லது தேன் கொண்டு எழுத்தறிவிக்கும் நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இனிப்புகள் வழங்கினர்

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து எழுத்தறிவிக்கும் விழாவில் கலந்து கொண்டனர். தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் என்று வேண்டி முதல் எழுத்தை பழகிய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பெற்றோர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT