திருப்பரங்குன்றம்,
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வசந்த உற்சவமாக 9 நாட்களும், விசாக திருவிழா ஒரு நாளும் என 10 நாட்கள் விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று வசந்த உற்சவம் தொடங்கியது. கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டு தீபாராதனை நடந்தது.
சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளி மண்டபத்தை 3 முறை வலம் வந்தார். நீர் நிரப்பப்பட்ட தொட்டி சார்ந்து நிறுவப்பட்டிருந்த ஊஞ்சலில் முருகப்பெருமான் தெய்வானை அம்பாளுடன் அமர்ந்து ஊஞ்சலாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சுவாமிக்கு தீப, தூப ஆராதனை நடந்தது.
திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 30-ந் தேதி விசாக விழா நடக்கிறது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள் மற்றும் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, பறவை காவடிகள் சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அன்று அதிகாலை 4.30 மணி முதல் மதியம் 3 மணி வரை இடைவிடாது பக்தர்கள் கொண்டு வரக்கூடிய பால் மூலம் குடம், குடமாக வள்ளி தெய்வானை, சண்முகப்பெருமானுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 31-ந் தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.