விஸ்வரூபம் என்றால் 'பிரபஞ்ச வடிவம்' என்று பொருள். இது, 'விராட்ரூபம்' என்றும் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதையும் தன்னுள் அடக்கி, எல்லையற்ற தன்மையை உணர்த்தும் இறைவனின் மாபெரும் வடிவமே விஸ்வரூபம் ஆகும். மகாபாரதத்தில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக விஸ்வரூப காட்சி கருதப்படுகிறது.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே குருச்சேத்திர போர் நடைபெற்றது. அப்போருக்கு முன்பாக, பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன், தனது உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவரும் எதிர்ப்படையில் நிற்பதைக் கண்டு மனவேதனை அடைந்தான். அவர்களை எதிர்த்து எவ்வாறு போர்புரிவது என்று சோர்வு அடைந்தான். தனது சொந்த மக்களையே வெற்றி பெறுவதில் எந்த அர்த்தமுமில்லை என்று போரிட தயங்கினான்.
அப்போது, அர்ச்சுனனின் தேரோட்டியாக இருந்த கிருஷ்ணர், மனிதர்களின் கடமை, வாழ்க்கையின் உண்மை, ஆத்மாவின் நிலைத்தன்மை குறித்து அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தார். அந்த உபதேசமே 'பகவத் கீதை'யாக போற்றப்படுகிறது.
கிருஷ்ணர், தன்னை ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருளாக விளக்கியபோது, அந்த தெய்வீக வடிவத்தை காண அர்ஜுனன் விரும்பினான். கிருஷ்ணரிடம் “உமது உண்மையான தெய்வீக வடிவத்தை காண்பியுங்கள்" என்று வேண்டினான். அதன்படி கிருஷ்ணர், தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினார்.
சாதாரண மனிதர்களின் கண்களுக்கு அந்த விஸ்வரூப தரிசனம் கிடைக்காது. எனவே கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு 'திவ்ய திருஷ்டி'யை (தெய்வீக பார்வை) வழங்கினார். அதன்மூலம் விஸ்வரூப வடிவத்தை பார்த்த அர்ச்சுனன் வியந்து போனான். அந்த வடிவம், எண்ணற்ற முகங்கள், கண்கள், கரங்கள், ஆயுதங்கள் கொண்டதாக இருந்தது. சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாக கொண்டிருந்தது. எல்லா திசைகளிலும் பரவி இருந்த அந்த உருவம், முழு பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கி இருந்தது.
அந்த விஸ்வரூப தரிசனத்தில் தேவர்கள், முனிவர்கள், உயிரினங்கள், உலகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து காணப்பட்டன. மேலும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளிப்பட்டன. ஆயிரம் சூரியன் ஒரே நேரத்தில் உதித்தால் எவ்வளவு பிரகாசம் இருக்குமோ, அதைவிட அளவற்ற ஒளி பிரகாசம் அந்த விஸ்வரூபத்தில் இருந்து வெளிப்பட்டது.
விஸ்வரூபத்தில், கவுரவ படையைச் சேர்ந்த பல வீரர்கள் கிருஷ்ணரின் அக்னி போன்ற வாயில் நுழைந்து அழிவதை அர்ஜுனன் கண்டான். இதன்மூலம், உலகில் நடைபெறும் அனைத்தும் இறைவனின் திட்டத்தின்படியே நடைபெறுகின்றன என்பதையும், மனிதன் ஒரு கருவி மட்டுமே என்பதையும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உணர்த்தினார்.
இறைவனின் விஸ்வரூப தரிசனத்தை பெற்ற அர்ஜுனன், வியப்பும் அச்சமும் அடைந்தான். இதுவரை நண்பராகவும், உறவினராகவும் பார்த்த கிருஷ்ணர், உண்மையில் உலகை படைத்து, காக்கும் பரம்பொருள் என்பதை உணர்ந்தான். உடனே கைகளைக்கூப்பி வணங்கி, தன்னுடைய அறியாமைக்கு மன்னிப்பு கோரினான். பின்னர் அர்ஜுனன், சந்தேகங்கள் நீங்கி, தன்னுடைய கடமையான போரில் ஈடுபட தயாரானான்.
இதேபோல் பாண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்தில் உள்ள துரியோதனன் சபைக்கு தூது சென்றபோது, துரியோதனனின் ஆணவத்தை அடக்கவும், தான் யார் என்பதை உணர்த்தவும் கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். அப்போது கண் பார்வைற்ற திருதிராஷ்டிரனுக்கு ஒரு கணம் கண் பார்வையைக் கொடுத்து, தன்னுடைய விஸ்வரூப காட்சியை காணும்படி செய்தார்.
குருக்ஷேத்திரப் போரின் முடிவில், கிருஷ்ணர் துவாரகைக்கு திரும்பும் வழியில் உத்தங்க முனிவரை சந்தித்தார். அப்போது போரில் உறவினர்கள் மாண்டது கண்டு கோபமடைந்த முனிவர், ‘இறைவனான உம்மால், இந்த மகாபாரதப் போரைத் தடுத்திருக்க முடியுமே. ஏன் இவ்வளவு ரத்தக் களறியை வேடிக்கை பார்த்தீர்?’ என்று கூறி கிருஷ்ணரை சபிக்க முயன்றார். தர்மத்தை காக்கவே போர் அவசியமானது என விளக்கிய கிருஷ்ணர், அர்ஜுனனுக்குக் காட்டியதைப் போன்றே தன் பிரம்மாண்டமான விஸ்வரூப தரிசனத்தை முனிவருக்கும் காட்டி சாந்தப்படுத்தினார்.
இதேபோல் கிருஷ்ணர் குழந்தைப்பருவத்தில், தனது தாய் யசோதைக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார். கிருஷ்ணர் மண்ணைத் தின்றதை அறிந்த தாய் யசோதை கோபத்துடன் வாயை திறந்து காட்டும்படி கூற, கிருஷ்ணர் வாயை திறந்து காட்டினார். அப்போது கிருஷ்ணரின் வாய்க்குள் இந்த பூமி, அதில் வசிக்கும் தாவரம், விலங்கு, மனிதர்கள், பூச்சிகள், அதைத் தாண்டி உள்ள அண்டசராசரங்கள், பரந்த வெளி உள்ளிட்ட அனைத்தும் தென்பட்டன. ஆனால், யசோதை கண்ட காட்சி விரைவிலேயே அவர் நினைவை விட்டு மறந்துபோகும்படி கிருஷ்ணர் செய்துவிட்டார்.
விஸ்வரூப காட்சி என்பது வெறும் ஆன்மிக நிகழ்வு மட்டுமல்ல. அது, ஆழமான தத்துவத்தை கொண்டுள்ளது. உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் வெளிப்பாடே என்பதை உணர்த்துகிறது. மனிதர்கள், விலங்குகள், கோள்கள், நட்சத்திரங்கள் என அனைத்தும் இறைவனின் அங்கமே.