பழனி,
பழனி முருகன் கோவிலில் வார விடுமுறையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும்.
அவ்வகையில் வார விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே பழனியில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக இருந்தது. அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் பகுதியில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை வழியாகவும், யானைப்பாதை வழியாகவும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் கிரிவலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அடிவாரத்தில் உள்ள கிரிவீதி மற்றும் முக்கிய வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.