எண்ணெய் குளியல் (AI Image) 
ஆன்மிகம்

தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?

தீபாவளி நாள் அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்வது, கர்ம வினைகளை நீக்கி, உடல் ஆரோக்கியத்தையும், செல்வச் செழிப்பையும் தரும் என்பது நம்பிக்கை.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை, 8-11-2026 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் பிரதான அம்சமே எண்ணெய்க் குளியல்தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலையில் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து, எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் வெந்நீர் அல்லது தண்ணீரில் குளித்து அன்றைய தினத்தை உற்சாகத்துடன் தொடங்குவது வழக்கம்.

சிறுவர்கள் அவசரம் அவசரமாக இந்த செயல்முறையை முடித்துவிட்டு, புத்தாடைகளை அணிந்துகொண்டு, தீபாவளி கொண்டாட்டத்தின் உற்சாகமான பகுதியான பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

எண்ணெய் குளியல் என்பது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, நேரம் கிடைக்கும்போது செய்யும் நடைமுறைதான். உடல் சூட்டை தணிப்பதற்காகவும், சரும பராமரிப்பு, கண்களுக்கு குளிர்ச்சி, முடி வளர்ச்சி, சீரான ரத்த அழுத்தம் என பலவேறு நன்மைகளை கருத்தில் கொண்டும், எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். ஆனால், தீபாவளி நாளில் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்? என்பதன் பின்னணியில் நரகாசுர வதம் தொடர்பான புராண கதை சொல்லப்படுகிறது.

நரகாசுர வதம்

மகா விஷ்ணுவின் அவதாரமான வராக மூர்த்திக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன். மனித குணமும் (நரன்) அசுர குணமும் ஒருங்கே பெற்றிருந்ததால் நாரகாசுரன் என்ற பெயர் உண்டாயிற்று. இவன் தன் தாயின் கையால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் இருந்து பெற்றான். எந்த ஒரு தாயும் தன் பிள்ளையைக் கொல்ல மாட்டாள் என்பதால், இந்த வரத்தை பெற்றதுடன், தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற அகந்தையில் இருந்தான். அவன் நினைத்தபடி அந்த யுகத்தில் நரகாசுரன் வதம் செய்யப்படவில்லை. அதன்பின் கிருஷ்ணாவதாரத்தின்போது, பூமாதேவியின் அம்சமான தேவி சத்யபாமாவால் நரகாசுரனுக்கு மரணம் ஏற்பட்டது.

நரகாசுரனுடன் நடந்த போரில் கிருஷ்ணர் தற்காலிகமாக மயக்கமடைந்தது போல் நடிக்க, சத்யபாமா வில்லேந்தி நரகாசுரனை வதம் செய்ததாக புராண மரபு கூறுகிறது.

கிருஷ்ணரின் எண்ணெய் குளியல்

நரகாசுரனை சத்யபாமா வதம் செய்தபிறகு, தன் உடலில் படிந்திருந்த ரத்தக் கறைகள் நீங்கவும், போரினால் ஏற்பட்ட சோர்வு நீங்கவும் அதிகாலையில் கிருஷ்ண பகவான் எண்ணெய் குளியல் எடுத்தார் என்று புராணம் கூறுகிறது. உடலில் உள்ள அனைத்து அழுக்கு, தீய மற்றும் அமங்கலமான விஷயங்களை அகற்றுவதே உடலைச் சடங்கு ரீதியாகத் தூய்மைப்படுத்துவதாகும் என்பது மற்றொரு பிரபலமான நம்பிக்கையாகும். எனவே, எண்ணெய் குளியல் என்பது அனைத்து அழுக்குகளையும் கழுவி அகற்றிய பிறகு ஏற்படும் ஒரு புதிய தொடக்கம் என்றும் பொருள் கொள்ளலாம்.

கங்கா ஸ்நானம் பலன்கள்

தீபாவளி தினத்தன்று அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்வது, கர்ம வினைகளை நீக்கி, உடல் ஆரோக்கியத்தையும், செல்வச் செழிப்பையும் தரும் என்பது நம்பிக்கை. எண்ணெய் குளியலில், நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், தண்ணீரில் கங்கா தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே, அன்றைய தினம் வீட்டில் குளித்தாலும், அது புனிதமான கங்கை நதியில் நீராடிய பலனைத் தரும்.

நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை தீபாவளி திருநாளில் வழிபட எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் செய்த பலகாரங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக படைத்து வழிபடலாம்.

SCROLL FOR NEXT