ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் 
ஆன்மிகம்

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றுவது ஏன்?

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால், அந்த வெண்ணெய் உருகுவதற்குள் வேண்டிய காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வேண்டினால் வாழ்க்கையின் துன்பங்களெல்லாம் அந்த வெண்ணைய் போலவே உருகிப் போகும் என்பார்கள் பெரியவர்கள். இதற்கு ஒரு புராண வரலாறு சொல்லப்படுகிறது.

ஸ்ரீராமபிரானுக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்ட பிறகு, இரண்டு அசுரர்கள் மட்டும் தப்பி ஓடினர். அவர்கள் தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டினர். எப்படியாவது ஸ்ரீராமனை அழித்துவிட வேண்டும் என நினைத்தனர்.

இந்த அசுரர்களை எப்படி சமாளிப்பது? என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தேவர்கள் கூடி ஆலோசித்தபோது, அசுரர்களின் ஆணவத்தை அடக்கும் பொறுப்பை ராம பக்தனான அனுமனிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

வெண்ணெய் உருகுவதற்குள் அசுரர்களை அழித்த அனுமன்

அசுரர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான். அத்துடன் சக்தி வாய்ந்த வில்லை வழங்கினார். பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் பிற கடவுள்களும் அனுமனிடம் பல ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பினர். அசுர வேட்டைக்கு அனுமன் புறப்பட்டபோது, ஸ்ரீராமபிரான் தனது அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அனுமனிடம் அளித்து, ‘இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும்’ என்று கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே, அனுமன் அந்த வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் அழித்துவிட்டார்.

அதனால், பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால், அந்த வெண்ணெய் உருகுவதற்குள் வேண்டிய காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

அனுமனின் வாக்கு

அதேபோல் ராம-ராவண யுத்தத்தின்போது, அனுமன் தன் தோள்களில் ராமரை சுமந்து சென்றார். அப்போது ராவணன் தொடுத்த அஸ்திரங்களால் அனுமனுக்குக் காயங்கள் ஏற்பட்டன. யுத்தம் முடிந்ததும், ராமபிரான் தன் அன்பின் வெளிப்பாடாக அனுமனின் காயங்கள் மீது குளிர்ச்சியான வெண்ணெயைத் தடவிக் காயங்களை ஆற்றியதாக புராண வரலாறு சொல்லப்படுகிறது. ராமன் தன் மீது வெண்ணெய் தடவி மகிழ்வித்ததை எண்ணி நெகிழ்ந்த அனுமன், தன்னைப்போலவே யார் தன் மீது வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுகிறார்களோ, அவர்களின் நோய்களும் துன்பங்களும் தீரும் என்று வாக்களித்ததாக ஐதீகம்

SCROLL FOR NEXT