துர்கா தேவி 
ஆன்மிகம்

விஜயதசமி கொண்டாடுவது ஏன்?

அன்னை துர்கா தேவி, 9 நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு, பத்தாவது நாள் அவனையும், அவனது அசுர படைகளையும் அழித்தார்.

தீமை அழிந்து தர்மம் வென்றதை உலகிற்கு பறைசாற்றும் உன்னத பண்டிகை விஜயதசமி ஆகும். 'விஜய்' என்றால் 'வெற்றி' என்றும், 'தசம்' என்றால் 'பத்து' என்றும் பொருள். அதாவது, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த ஒன்பது நாட்கள் நவராத்திரியாக போற்றப்பட்டு, பத்தாம் நாள் விஜயதசமி திருநாளாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் தொய்வின்றி வெற்றி பெறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

விஜயதசமி விழா கொண்டாடப்படுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் கூறப்படுகின்றன. வட இந்தியாவில் விஜயதசமி 'தசரா' என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு. பத்து தலைகளை உடைய ராவணனை ராமர் வதம் செய்த நாளாக தசரா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வட இந்தியாவில் ராம்லீலா வைபவம் மிகவும் விசேஷமாக நடைபெறுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்கள், ராமரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடத்துவார்கள். பத்தாவது நாள் தசரா அன்று, ராமர் ராவணனை வென்றதைக் குறிக்கும் வகையில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகியோரின் பிரமாண்ட உருவ பொம்மைகள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன.

தென் இந்தியாவில் பெரும்பாலும் துர்கா தேவி தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு மகிஷாசுரனை அழித்த தினமாக விஜயதசமி போற்றப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அசுரர்கள் ரம்பன், கரம்பன் தவம்

முன்னொரு காலத்தில் தனு என்ற வலிமை பெற்ற அசுரன் இருந்தான். அவனுக்கு ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பெரும் சக்திகளை பெற எண்ணியும், அசுர குலத்தை நிலைநிறுத்த வேண்டியும் தங்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த புத்திரர்கள் வேண்டும் என்பதற்காக கடுமையாக தவம் இயற்றினர். கரம்பன் என்பவன் தண்ணீருக்குள் நின்றும், ரம்பன் என்பவன் அக்னிக்கு நடுவில் நின்றும் தவம் செய்தனர்.

இவர்களின் தவ வலிமையை கண்டு அஞ்சிய இந்திரன், இவர்களுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து என்று கருதினார். எனவே இந்திரன், முதலை உருவம் எடுத்து, கரம்பன் தவம் இயற்றிய தண்ணீருக்குள் சென்று அவனை கொன்றார்.

வரம் அளித்த அக்னி தேவர்

இதை அறிந்து ஆத்திரமடைந்த ரம்பன், தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான். மேலும், தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னிக்கு பலி கொடுக்க முயன்றான். அப்போது, அவனின் தவத்தில் மகிழ்ந்த அக்னி தேவர், அவனுக்கு காட்சி அளித்து, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

"மூன்று உலகங்களையும் நடுங்கச் செய்யும் அளவுக்கு, மிகவும் சக்தி வாய்ந்த, எவராலும் வெல்ல முடியாத மகன் வேண்டும்” என்றான் ரம்பன்.

உடனே அக்னி தேவர், “நீ எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறாயோ, அவளுடன் உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் மிகவும் பராக்கிரமசாலியாக இருப்பான்" என்று வரம் அளித்தார்.

வரம் பெற்ற மகிஷாசுரன்

வரம் பெற்ற மகிழ்ச்சியில் ரம்பன் காட்டின் வழியே வரும்போது, அவன் கண் முன்னே ஒரு பெண் எருமை (மகிஷி) தென்பட்டது. அக்னி தேவனின் வரத்தின்படி, மகிஷியின் மூலம் அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். எருமைத் தலையும், மனித உடலும் கொண்டிருந்த அவன் 'மகிஷாசுரன்' என்று அழைக்கப்பட்டான்.

மகிஷாசுரன், மகாமேரு மலையில் பத்தாயிரம் ஆண்டுகள் கடுமையான தவம் இருந்தான். அவன் தவத்தைக் கண்டு மெச்சிய பிரம்ம தேவர், அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு மகிஷாசுரன், தனக்கு சாகாவரம் வேண்டும் என்று கேட்டான். ஆனால் பிரம்ம தேவர், பிறப்பு இருந்தால் இறப்பு என்பது நிச்சயம் என்று அதை மறுத்து, வேறு வரம் கேட்கும்படி கூறினார்.

உடனே தந்திரமாக யோசித்த மகிஷாசுரன், "எனக்கு தேவர்களாலும், பூதங்களாலும், ஆண்களாலும், மிருகங்களாலும் மரணம் நிகழக் கூடாது" என்று கேட்டான். ஒரு பெண்ணால் என்ன செய்துவிட முடியும்? என்ற ஆணவத்தில் பெண்ணை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்ம தேவரும் அவன் கேட்டபடியே வரம் வழங்கினார். மகிஷாசுரன், தான் பெற்ற வரத்தால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான்.

9 நாட்கள் நடந்த போர்

இதனால் வருந்திய தேவர்கள், மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் ஒளியை உருவாக்கினர். அந்த ஒளியில் இருந்து சிம்ம வாகனத்தில் பத்து கைகளுடன் ஆயுதங்கள் ஏந்திய அன்னை துர்கா தேவி உக்ர ரூபத்துடன் தோன்றினார்.

அந்த அன்னை, ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு, பத்தாவது நாள் அவனையும், அவனது அசுர படைகளையும் அழித்தார். இதனால் அன்னை, 'மகிஷாசுர மர்த்தினி' என்று அழைக்கப்படுகிறார். அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றி பெற்ற பத்தாவது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT