சக்கர ஸ்நானம் 
ஆன்மிகம்

கபில தீர்த்தத்தில் சக்கர ஸ்நானம்.. திருப்பதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவம் நிறைவு

கபில தீர்த்த புஷ்கரணியில் நடைபெற்ற சக்கர ஸ்நானம் நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.

திருப்பதி,

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 17-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், வாகன சேவைகள் நடைபெற்றன. விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது.

இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவை குறிக்கும் வகையில் இன்று காலையில் கபில தீர்த்தத்தில் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. கபில தீர்த்த புஷ்கரணியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.

முன்னதாக காலை 7.30 மணியளவில், சீதா தேவி, ராமபிரான் மற்றும் லக்ஷ்மண சுவாமிகள் பல்லக்கில் ஊர்வலமாக கபில தீர்த்தத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டனர். காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை, ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலய மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு 'ஸ்நாபன திருமஞ்சனம்' எனும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது, ​​சீதா தேவி, ராமர் மற்றும் லக்ஷ்மண சுவாமிகள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில், உற்சவ மூர்த்திகள் ஆழ்வார் தீர்த்தத்திலிருந்து பி.ஆர். தோட்டம் பகுதிக்கு எழுந்தருளினர். மாலையில், தீர்த்தக்கட்டா வீதி, கோட்டக்கொம்மல வீதி மற்றும் கோத்தவீதி வழியாக ஊர்வலமாக சென்று கோதண்டராமர் கோவிலை அடைவார்கள். ஊர்வலப் பாதையில் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் வைகானசாச்சாரியர் கோவிலில் 'ஆஸ்தானம்' நடைபெறும்.

இரவு 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் கொடியிறக்கம் நடைபெறும். இத்துடன் பிரம்மோறசவம் நிறைவு பெறும்.

இன்றைய நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி நாகரத்னா, கோவில் ஆய்வாளர் சுரேஷ், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.