Image credits : AI 
கல்வி&வேலைவாய்ப்பு

என்ஜினீயரிங் படிப்பில் சேர இதுவரை 1.30 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

கடந்த 8-ந்தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியான அன்றைய தினம் மட்டும் சுமார் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவாகியிருந்தன. அதற்கு மறுநாள் சுமார் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவாகின.

இப்படியாக தினமும் குறைந்தது 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

அந்த வகையில் கடந்த 3-ந்தேதியில் இருந்து நேற்று மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி, இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்து 835 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாகவும், அதில் 60 ஆயிரத்து 875 பேர் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியுள்ளதாகவும், அவர்களில் 27 ஆயிரத்து 567 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் கலந்தாய்வை நடத்த இருக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.