கல்வி&வேலைவாய்ப்பு

வேளாண் படிப்புகளுக்கு இதுவரை 25,330 பேர் விண்ணப்பம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 8-ந்தேதி கடைசி நாளாகும்.

கோவை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த இளம் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவிற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 3 இளம் அறிவியல் வேளாண்பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இளம் அறிவியல் பாடப்பிரிவு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இந்த கல்வியாண்டில் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 2,516 ஆகவும் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 4,736 (அரசாங்க இடஒதுக்கீடு 3051 + மேலாண்மை இடஒதுக்கீடு 1685 ஆக மொத்தம்- 4736) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு 1,240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

8-ந்தேதி கடைசிநாள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைகளுக்கான இணையதள விண்ணப்பங்களை கடந்த மாதம் 6-ந்தேதி முதல் http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வழங்கி வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 8-ந்தேதி கடைசி நாளாகும். எனவே மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 8-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை பட்டப் படிப்புகளுக்கு 25 ஆயிரத்து 330 விண்ணப்பங்களும் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு 1,564 விண்ணப்பங்களும் வரப்பெற்றுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.