ai image 
கல்வி&வேலைவாய்ப்பு

வேலை உங்கள் கையில்!-1

ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் பொறியியல் பட்டதாரிகளாக மாறுகிறார்கள்.

1. மாறிவரும் சூழல்கள்

எதிர்காலக்கனவுகளோடு பள்ளி, கல்லூரிகளில் கல்வி கற்கும் இளைய உள்ளங்கள் நாள்தோறும் அதிகமாகிக்கொண்டு வருகிறார்கள். இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஏராளம்.

சமீபகாலமாக தமிழகத்தில் பல்வேறு பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால் தமிழகம் கல்வி வளர்ச்சியில் மேலோங்கி நிற்கிறது. பல தனியார் பல்கலைக்கழகங்களும் தமிழக இளைஞர்களை மட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள இளம் வயதினர் பலரை பட்டதாரிகளாகவும், ஆராய்ச்சி வல்லுநர்களாகவும் மாற்றிவிட்டது.

பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படாத நிலையில், பட்டதாரிகள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., போன்ற கலை, அறிவியல் பட்டப்படிப்புகளும், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.சி.ஏ., போன்ற பட்ட மேற்படிப்புகளும் படித்து லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பட்டங்களைப்பெறுகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., போன்ற தொழில்நுட்ப படிப்புகளை நடத்துகின்ற பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் தமிழகத்தில் அதிகமாகிவிட்டது. இப்போது, தமிழகத்தில் சுமார் 575-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் பொறியியல் பட்டப்படிப்புகளை நடத்தி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கல்வி நிலையங்களில் கல்வி கற்று ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் பொறியியல் பட்டதாரிகளாக மாறுகிறார்கள்.

பொறியியல் பட்டதாரிகளுக்கெல்லாம் வேலைகள் வழங்கும் அட்சய பாத்திரமாக பல வெளிநாட்டு கம்ப்யூட்டர் நிறுவனங்களும், வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் (Automobile Industries) விளங்கி வந்தன.

உலகமயமாக்கல் (Globalisation), தனியார்மயமாக்கல் (Privatisation), தாராளமயமாக்கல் (Liberalisation), போன்றவை இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியதால் தொழிற்கல்வி கற்ற லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த சில ஆண்டுகள்வரை படித்து முடித்ததும் உடனே வேலை கிடைத்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் கை நிறைய சம்பளத்தையும் வழங்கினார்கள். ஆனால், அதேவேளையில் வேலை நேரத்தை அதிகரித்து விடுமுறை நாட்களை குறைத்து அவர்களின் நிறுவனத்திற்கு மட்டுமே முழு நேரமும் உழைக்க வேண்டும் என்கின்ற புதிய கொள்கையையும் அறிமுகப்படுத்தினார்கள். இதனால், வீட்டையும் சொந்தங்களையும் மறந்து, முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளில்கூட கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டாலும், வாழ்க்கை வசதிகள் பெருகியதால் பணியாளர்களெல்லாம் மகிழ்ச்சியோடு பணியாற்றினார்கள்.

ஆனால், தற்போது அதிக அளவு வேலை வழங்கிய கம்ப்யூட்டர் கம்பெனிகளின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஒரு காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட எதனை படித்தாலும் வேலை கிடைத்தது. பின்னர், கம்ப்யூட்டர் படித்த பட்டதாரிகளுக்கு மட்டும் வேலை கொடுத்தார்கள். அதன்பின்னர் கம்ப்யூட்டர் படித்த பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே வேலையை பெற்றார்கள். பின்னர் சி+, ஜாவா என விதவிதமான சிறப்பு பயிற்சிகள் பெற்றவர்களை மட்டுமே கம்ப்யூட்டர் நிறுவனங்கள் வேலையில் அமர்த்தின. இப்போது கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பெரிய படிப்புகள் எதை படித்திருந்தாலும்கூட, வேலை என்பது குதிரைக்கொம்பாகிவிட்டது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த புகழ்மிக்க கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவரை சந்தித்தேன். புதிதாக பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி கேட்டேன். அவர் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியத்தை தந்தது.

“சார்... எங்கள் கம்பெனியில் இப்போது ‘லேட்டரல் என்ட்ரி சிஸ்டம்’ (Lateral Entry System) மூலம் புதிதாக ஆட்களை தேர்ந்தெடுக்கிறோம். இதன்படி மற்ற நிறுவனங்களில் குறைந்தது 5 வருடங்கள் கம்ப்யூட்டர் துறையில் நாங்கள் விரும்பும் பிரிவில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களை மட்டுமே இண்டர்வியூவுக்கு அழைக்கிறோம். அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அனுபவமில்லாத புதிய பட்டதாரிகளுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலை இல்லை. சின்னஞ்சிறு கம்பெனிகளில் வேலை செய்து எல்லா துறைகளிலும் அனுபவம் பெற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் எளிது என்பதால் எங்கள் நிறுவனம் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்து பணி வழங்குகிறது” - என்று குறிப்பிட்டார் அந்த உயர் அதிகாரி.

புதிதாக பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு மிகப்பெரிய நிறுவனங்களில் பணிவாய்ப்பு இல்லை என்பதை மறைமுகமாக அவர் தெளிவுபடுத்தினார்.

எனக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ரமேஷ் எனது நெருங்கிய உறவினரின் மகன். பி.இ., பட்டதாரி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தான். சென்னையிலுள்ள ஒரு சிறிய கம்ப்யூட்டர் நிறுவனம் அவனுக்கு வேலை கொடுத்தது. 6 மாதம் கழித்து ஊருக்கு வந்தான். அவனை சந்திக்கும்போது எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

“அங்கிள்... கம்ப்யூட்டர்ல டிகிரி வாங்கினவங்களுக்கு சென்னையில வேலை கிடைக்கிறது இப்போது ரொம்ப கஷ்டம். சென்னையில் பெரிய வெள்ளம் வந்தபின்பு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய பலருக்கு வேலை இல்லை. சில சிறிய கம்ப்யூட்டர் நிறுவனங்களை இழுத்து மூடிவிட்டார்கள். நான் எனது கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதம் ஆகிவிட்டது. முதலில் 6 மாதம் எனக்கு டிரெயினிங் தந்தார்கள். டிரெயினிங் தருகின்ற காலத்தில் சம்பளம் கிடையாது என்று முதலிலேயே சொல்லிவிட்டார்கள்.

ஆனால் இப்போது 9 மாதங்கள் ஆகிவிட்டன. உங்கள் டிரெயினிங் காலத்தை நீட்டித்திருக்கிறோம். விரைவில் உங்களுக்கு ‘பெர்பாமன்ஸ் அப்ரைசல்’ வைப்போம். அதில் திருப்தி இருந்தால் மட்டுமே உங்களுக்கு சம்பளம் வழங்குவோம் என்று சொல்லிவிட்டார்கள். நான் திரும்பவும் சென்னைக்குப்போனால்தான் எனக்கு அங்கு வேலை இருக்கிறதா? இல்லையா? என்றே தெரியும்” என்று வருத்தத்தோடு சொன்னான் ரமேஷ்.

ரமேஷ் பணியாற்றும் நிறுவனத்தைப்போலவே தமிழகத்திலுள்ள சில தொழில் நிறுவனங்கள் இன்றும் பயிற்சிக்காலத்தில் எந்தவித சம்பளமும் கொடுக்காமல், பயிற்சி கட்டணம் வசூலித்து பணியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தரும் உண்மையாகும்.

படித்து முடித்து பட்டம் பெற்றதும் இனி வேலை கிடைக்காதா? என்ற கேள்வி பல இளைய உள்ளங்களின் மனதில் இப்போது உருவாக ஆரம்பித்துவிட்டன. சரியான தகுதியும், சிறப்புத்திறமைகளும் கொண்டவர்களுக்கு எப்படியாவது வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால் படிக்கும்போதே பட்டம் பெறுவதற்கு மட்டும் படித்துவிட்டு வேலை பெறுவதற்கான எந்த சிறப்புத்திறனையும் (Skills) வளர்க்காமல், வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பது சில வேளைகளில் ஏமாற்றங்களை கொண்டு வந்து விடும்.

“நன்றாக படித்தவர்களுக்குக்கூட வேலை கிடைக்கவில்லையே. பிறகு நான் ஏன் படிக்க வேண்டும்?” என்ற எண்ணத்தை மனதில் தேக்கி, தட்டுத்தடுமாறி பட்டம் வாங்கியவர்களும் உண்டு. இவர்களில் சிலர், பட்டப்படிப்பை படித்து முடித்தபின்புதான் “கல்லூரியில் வழங்கப்பட்ட பயிற்சிகளை முறையாக கடைபிடிக்காமல் இருந்ததால்தான் இன்று எனக்கு வேலை கிடைக்கவில்லை. படிக்கும்போது நான் தவறு செய்துவிட்டேன்” - என்று அவர்களே தங்களின் குறையை உணர்ந்து கொள்கிறார்கள். காலம் கடந்தபின்பு ஞானம் வந்து என்ன பயன்?

பல சிறந்த தனியார் நிறுவனங்கள் மிகச்சிறந்த வேலை வாய்ப்பை இன்றும் வழங்கி வருகின்றன. இந்த சிறந்த நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு மிகச்சிறந்த கல்வித்தகுதிகளும், திறமைகளும் ஒருவருக்கு கண்டிப்பாகத்தேவை.

தனியார் வேலைவாய்ப்புகள் ஒருபுறம் ஏராளமாக இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகள் நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. போதிய கல்வித்தகுதியுடன், சிறந்த திறமையும் பெற்றவர்களுக்கு அரசு வேலை சரியான நேரத்தில் உடனே கிடைத்து விடுகிறது. ஆனால் அதேவேளையில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது அரசு வேலை வாய்ப்புகளைப்பற்றி எதுவும் தெரியாமல் பட்டப்படிப்பை முடித்தபின்பு எந்த படிப்பு படித்தால் அரசு வேலை கிடைக்கும் என திண்டாடுபவர்களும் உண்டு.

இத்தகைய குழப்பங்களுக்கு விடை காண விரும்பினால் போட்டித்தேர்வு என்றால் என்ன? மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகளை எழுதுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள் எவை? அந்தத்தேர்வுகளை எழுதுவதற்கு என்னென்ன தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்? வங்கிகளில் வேலை பெறுவது எப்படி? ரெயில்வே பணிகளில் சேருவது எப்படி? முப்படைகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கு எந்தெந்த வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்? என விரிவான தகவல்களை தெரிந்துகொள்வதுதான் ஒரே தீர்வாக அமையும்.

போட்டித்தேர்வுகள் என்றால் என்ன?

இது போட்டி உலகம். எந்தவொரு வேலையை பெறுவதற்கும் ஏராளமானபேர் போட்டி போடுகிறார்கள். சுமார் 1,000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு (Civil Services Examination) எழுத 10 லட்சத்திற்குமேல் போட்டியாளர்கள் விண்ணப்பிக்கிறார்கள் என்ற தகவல் நமக்கு ஆச்சரியம் தருகிறது.

“லட்சக்கணக்கான பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தால் நமக்கு வேலை கிடைக்குமா?” என்று எண்ணி இந்தத்தேர்வை எழுதாமல் விட்டவர்களும் உண்டு. ஆனால் விண்ணப்பித்தவர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் இந்த சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதாமல் விட்டுவிடுகிறார்கள்” என்ற தகவல் தெரிந்தால் நம்மில் பலருக்கு நம்பிக்கை வந்துவிடும்.

எனவேதான், போட்டித்தேர்வைப்பற்றி தெளிவாக அறிந்து கொள்வது நல்லது. பல போட்டியாளர்களுடன் போட்டிப்போட்டு தேர்வு எழுதி அதன் அடிப்படையில் சிறந்த பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையை ‘போட்டித்தேர்வு’ (Competitive Examination) என அழைக்கிறார்கள்.

பட்டப்படிப்பில் நடத்தப்படுகின்ற தேர்வுக்கும் (Degree Examination), போட்டித்தேர்வுக்கும் (Competitive Examination) பல வேறுபாடுகள் உள்ளன.

பட்டம் பெறுவதற்காக நடத்தப்படுகின்ற தேர்வு மிகவும் சாதாரண தேர்வாக இருக்கிறது. ஒரு வாரத்திற்குமுன்பு நோட்ஸ் (Notes) வாங்கி, அதனை ஒரே மூச்சில் படித்துவிட்டு, அடுத்த சில நாட்களில் அவசர அவசரமாக தேர்வை சந்திக்கின்ற பட்டப்படிப்பு மாணவ -மாணவிகளும் உண்டு. ‘கடைசி நேர பாடத்தயாரிப்பு’ என்பது பட்டப்படிப்பில் செமஸ்டர் முறையில் நடத்தப்படும் தேர்வுகள் எழுத உதவியாக இருக்கலாம்.

ஆனால், போட்டித்தேர்வு எழுத இந்த அவசர காலத்தில் போடப்படும் ‘தயாரிப்புக்கோலங்கள்’ நிச்சயமாக உதவாது. ஏனென்றால் போட்டித்தேர்வு என்பது முறையான பயிற்சி (Systematic Preparation) மேற்கொண்டபின்பு எழுதப்பட வேண்டிய தேர்வாகும்.

போட்டித்தேர்வு எழுதும்போது சில எதிர்பாராத நிகழ்வுகளும் நிகழலாம். அதாவது பட்டப்படிப்பில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட, போட்டித்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதே வேளையில், பட்டப்படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் கூட போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.

பொதுவாக, பட்டப்படிப்புத்தேர்வில் “அக மதிப்பீட்டு மதிப்பெண்கள்” (Internal Marks) என்ற மதிப்பீட்டின் மூலம் ஒவ்வொரு பாடத்திற்கும் 100க்கு 25 மதிப்பெண்களை, அந்தந்த பாடத்தை நடத்தும் ஆசிரியர்கள் வழங்கி விடுகிறார்கள். மீதமுள்ள 75 மதிப்பெண்களுக்குத்தான் பல்கலைக்கழகம் தேர்வு நடத்தும். பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வு மதிப்பெண்களை “புற மதிப்பீட்டு மதிப்பெண்கள்” (External Marks) என அழைப்பார்கள். இந்த அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் மற்றும் புற மதிப்பீடடு மதிப்பெண்கள் ஆகிய இரண்டு மதிப்பீட்டிலும் சேர்த்து மொத்தம் ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 35 மதிப்பெண்கள் பெற்றாலே ஒருவர் வெற்றி பெற்றதாக பல்கலைக்கழகம் அறிவித்து விடுகிறது.

ஆனால், போட்டித்தேர்வில் இப்படி 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கெல்லாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. இந்தத்தேர்வில் வெற்றி, தோல்வி என்பது ஒருவர் பெற்ற அதிக மதிப்பெண்களை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது கலந்து கொண்ட போட்டியாளர்களில் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே வரிசைப்படுத்தப்பட்டு ‘ரேங்க்’ (rank) கணக்கிட்டு அதன்பின்னர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

போட்டித்தேர்வை எழுதுபவர்களுக்கும், பல்கலைக்கழகத்தேர்வை எழுதுபவர்களுக்கும் வயது வித்தியாசம் நிறைய உள்ளது. பல்கலைகழகத்தேர்வில் ஒரே வயதுடையவர்கள் தேர்வை எழுதுகிறார்கள். ஆனால் போட்டித்தேர்வில் 18 வயது முதல் - 35 வயது வரை வயது வித்தியாசம் இல்லாமல் அதிக வயது கொண்டவர்கள்கூட தேர்வு எழுத வாய்ப்புள்ளது. இதனால் தன்னோடு போட்டியிடும் போட்டியாளர்களின் அனுபவம் (Experience), மற்றும் தயாரிப்புத்தன்மை (Nature of Preparation) போன்றவற்றைப்பற்றி ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை.

சுமார் 18 வயதில் ஒருவர் தேர்வு எழுதுவதற்கும், 35 வயது கொண்ட ஒருவர் தேர்வு எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அல்லவா?

அதிக வயது கொண்டவர்களுக்கு புரிந்துகொள்ளும் தன்மையும் (Understanding), தெளிவான சிந்தனையும் (Clarity of Thinking) சற்று அதிகமாகவே அமையும். இதனால் மிகக்குறைந்த வயதில் போட்டித்தேர்வை எழுதுபவர்கள் அதிக அக்கறையுடனும் கவனத்துடனும் முன்கூட்டியே தயாரிப்புப்பணியில் ஈடுபடுவது நல்லது.

போட்டித்தேர்வை எழுதுபவர்கள் எந்தெந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்று தேர்வு எழுதுபவர்களுக்கு தெரியாது. இதனால், சிறந்த பின்னணி கொண்டவர்கள் தேர்வை எழுதி சிறந்த வெற்றியை பெற்றுவிடுகிறார்கள்.

போட்டித்தேர்வை எழுதுபவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். வெவ்வேறு இடங்களில் இவர்கள் வசிப்பதால் பல்வேறு பல்கலைகழகங்களில் படிக்கின்ற வாய்ப்பு இவர்களுக்கு உள்ளது. இதனால் தேர்வுக்கான பாடத்திட்டம் அந்தந்த பல்கலைக்கழகத்தை பொறுத்து மாறுபடுகிறது. கிராமப்புற பகுதிகளில் படிப்பை முடித்தவர்களும், நகர்ப்புற பகுதிகளில் படித்தவர்களும் ஒரே நேரத்தில் போட்டித்தேர்வை எழுதுகிறார்கள்.

மேலும், குழந்தைப்பருவம் முதல் பட்டப்படிப்புவரை ஆங்கிலத்திலேயே படித்தவர்களும் இந்தத்தேர்வை எழுதுகிறார்கள். ஆனால் அதே வேளையில் பள்ளிப்படிப்பு முழுவதையும் தமிழில் படித்துவிட்டு பட்டப்படிப்பை மட்டும் ஆங்கில வழியில் படித்து முடித்தவர்களும் இதே தேர்வை சந்திக்கிறார்கள்.

இடத்திற்கு இடம் கல்விமுறை மாறுபடுகிறது. ஊருக்கு ஊர் பயிற்றுவிக்கும் முறையும் வேறுபடுகிறது. எனவே- போட்டித்தேர்வை யார் சிறந்த முறையில் எதிர்கொள்கிறார்கள் என்பது ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சியையும், பயிற்சியையும் பொறுத்தே அமைகிறது.

தரம் குறைந்த பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் போட்டித்தேர்வை எழுதுவதில் அதிக சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித்தேர்வை சந்திப்பதற்கு மிகச்சிறந்த தேர்வு தயாரிப்பு அவசியமான ஒன்றாகும்.

போட்டித்தேர்வை எழுதுபவர்களின் கல்வி தகுதியும் வெவ்வேறாகவே உள்ளன. போட்டித்தேர்வை எழுதுபவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் (Degree) இருக்கிறார்கள். பட்டமேற்படிப்பை (Post Graduate Degree) முடித்தபின் தேர்வை சந்திப்பவர்களும் உண்டு. ஆராய்ச்சி படிப்புகளான எம்.பில்., (M.Phil) பி.எச்.டி., (Ph.D) முடித்தவர்களும்கூட இந்தத்தேர்வை எழுதுவார்கள். “எந்த தகுதியை கொண்டவர்களோடு போட்டிப்போட போகிறோம்” என்பது போட்டியாளர்களுக்கு தெரிவதில்லை.

ஆனால், பல்கலைக்கழகத்தேர்வில், ஒரே பாடப்பிரிவில் படிக்கும் மாணவ மாணவிகளுடன்தான் போட்டி போடக்கூடிய நிலை உருவாகும். பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வில் பி.ஏ., ஆங்கிலம் படிக்கும் ஒரு மாணவர் அதே ஆங்கில பாடம் எடுத்து படிக்கும் மற்ற மாணவரோடு போட்டிப்போட்டு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்றால் சிறந்த மாணவன் என்று கருதப்படுகிறார். ஆனால், போட்டித்தேர்வில் ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர்களோடும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் போட்டிப்போட வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் சிறப்பான முறையில் இளம் வயதில் இருந்து போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் மனப்பான்மையை உருவாக்கி கொள்ள வேண்டும்.

“மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முடித்துவிட்டு, உடனே ஏதாவது ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்துவிட்டால் ஒரு வருடம் கழித்தவுடன் போட்டித்தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம்” என்ற எண்ணம் சிலர் கொண்டிருக்கிறார்கள். சிறந்த முறையில் தேர்வு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மட்டுமே போட்டித்தேர்வை வெற்றிகரமாக சந்திக்க இயலும்.

SCROLL FOR NEXT