வடவள்ளி,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2026-27 -ம் கல்வியாண்டில் வேளாண் பட்டப் படிப்புகளுக்கு ஒரே இணையதள விண்ணப்பம் வழியாக 14 வகை பாடப்பிரிவுக்கு இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையத்தளத்தில் பெறலாம். அதில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூன்) 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்கைக்கு தகுதியான பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்லூரிகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.
தரவரிசை பட்டியல் வெளியான பிறகு. தகுதியான மாணவர்கள் இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். கலந்தாய்வில் கலந்து கொள்ளும் இணையதளத்தை பயன்படுத்தி கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாதவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது. கலந்தாய்வு முடிவில், மாணவர்களின் தரவரிசை, சாதி, விருப்பத்தின் அடிப்படையில் பட்டப்படிப்பு, கல்லூரி ஒதுக்கீடு செய்யப்படும்.
இடஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவிகள் அசல் சான்றிதழ்கள், ஆவணங்களை பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சரிபார்த்த பிறகே இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். சேர்க்கை கட்டணம் செலுத்திய பிறகே பட்டப்படிப்பு மற்றும் கல்லூரி ஒதுக்கீடு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை ugadmissions@tnau.ac.in மற்றும் agridean2015@gmail.com என்ற மின்னஞ்சல்கள் மூலமாக பெறலாம்.