கல்வி&வேலைவாய்ப்பு

குடிமை பணிகளுக்கான முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அறிவிப்பு

பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் சேர்த்து ஊக்கத் தொகையாக ரூ.9,000/- வழங்கப்படும்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதன்மை தேர்வு பயிற்சி

அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு ஜூன் 2026 முதல் ஆகஸ்டு 2026 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஊக்க தொகை

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமின்றி, குடிமைப்பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த இதர ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் சேர்த்து ஊக்க தொகையாக ரூ.9,000/- வழங்கப்படும்.

பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்

இப்பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் 17.06.2026 காலை 6.00 மணி முதல் 18.06.2026 மாலை 6.00 வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்ட ஆர்வலர்களின் விவரம் 18.06.2026 இரவு 9.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டு 20.06.2026 மற்றும் 21.06.2026 ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு, 22.06.2026 முதல் முதன்மை தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

தொடர்பு கொள்ளலாம்

மேலும், விண்ணப்ப பதிவு/சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண் (Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.