இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் நாடு முழுவதும் 7,150 அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை எஸ்பிஐ கடந்த மே 19-ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முதலில் ஜூன் 8-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில், கடைசி தேதி தற்போது ஜூன் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடைசி நேரத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்க்க, முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ கரியர் போர்டல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இந்த அப்ரண்டிஸ் பயிற்சித் திட்டத்தின் காலம் ஒரு ஆண்டு ஆகும். பயிற்சி காலம் முழுவதும் மாதந்தோறும் ரூ.15,000 ஸ்டைபெண்ட் வழங்கப்படும்.தேர்வு நடைமுறையில் முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு உள்ளூர் மொழித் தேர்வு நடைபெறும். இதற்குப் பிறகு ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கல்வித் தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.