சென்னை,
பி.எட்., எம்.எட். பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களைப் பல்கலைக்கழகச் சேர்க்கை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சுயநிதி இணைப்புக் கல்லூரிகளில், 2026-2027 கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.
இதற்கான மாணவர் சேர்க்கை விவரங்களைப் பல்கலைக்கழகத்தின் சேர்க்கை இணையதளத்தில் பதிவு செய்வதற்கு அக்டோபர் 6-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போதைய மாணவர் சேர்க்கை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, சேர்க்கை விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை விவரங்களை அக்டோபர் 22-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்ய, துணைவேந்தர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் குழு அனுமதி அளித்துள்ளது.
இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தைப் பயன்படுத்தி, அனைத்துச் சுயநிதி இணைப்புக் கல்லூரிகளின் முதல்வர்களும் தங்களது கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள தகுதியான மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சேர்க்கை இணையதளத்தில் பதிவு செய்து, சேர்க்கை நடைமுறைகளை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட அக்டோபர் 22-ஆம் தேதிக்குப் பிறகு, கால அவகாச நீட்டிப்பு கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் எதுவும் பரிசீலிக்கப்படாது எனத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.