சென்னை,
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் (NMMS) கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 (ஆண்டுக்கு ரூ.12,000) கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான என்.எம்.எம்.எஸ். (NMMS) திறனாய்வு தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
இத்தேர்வெழுத விருப்பமுள்ள தகுதியான மாணவ-மாணவிகள், அரசு தேர்வு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணமாக ரூ.50-ஐ சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.