1960 ஆம் ஆண்டு இந்திய அரசு சார்பில் புனே என்னும் இடத்தில் "இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்" (THE FILM AND TELEVISION INSTITUTE OF INDIA) தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய பிரபாத் ஸ்டூடியோவில் இந்த நிறுவனம் செயல் பட்டது. பின்னர் முழுமையாக அதே இடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நிறுவனம் நிகர் நிலை பல்கலைக்கழகமாக (DEEMED TO BE UNIVERSITY) அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வகை படிப்புகளையும் "இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் "நடத்தி வருகிறது.
இங்கு நடத்தப்படும் முக்கிய படிப்புகள்;
M.F.A IN CINEMA
1. எம் எப் ஏ இன் சினிமா( திரைப்பட இயக்கம் மற்றும்திரைக்கதை எழுதுதலில் சிறப்பு பாடப்பிரிவு)
(MFA IN CINEMA (WITH SPECIALISATION IN DIRECTION & SCREEN PLAY WRITING).
இந்தப் படிப்பு, திரைப்படக் கலையில் முதுகலை படிப்பாகும். திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதலில் சிறந்த படிப்பாக இந்த படிப்பை கருதுகிறார்கள்
MASTER OF ARTS IN CINEMA (WITH SPECIALISATION IN DIRECTION & SCREEN PLAY WRITING) என்னும் இந்த படிப்பு மூன்று வருட படிப்பாகும். திரைப்படத்தின் தோற்றம் ,வளர்ச்சி, திரைப்படத் துறையின் புதுமைகள், திரைப்படத்தின் முழுமையான வரலாறு போன்றவைகள் இந்த படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.
மேலும் தெளிவான வரலாறு சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் குறித்த கண்ணோட்டத்தை திரைப்படங்கள் மூலமாக உருவாக்க பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
"மனிதநேயத்தோடு இந்திய மக்கள் வாழ வேண்டும்" என்னும் அடிப்படை கருத்தை மையமாகக் கொண்டு பலவிதமான கதைகளை உருவாக்கி, அதன் அடிப்படையில் திரைப்படங்களை தயார் செய்ய முறையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
திரைப்படத் துறையில் உருவாகும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிமுகப்படுத்தவும், அந்த தொழில்நுட்பங்களின் உதவியோடு திரைகலையில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் தேவையான அனைத்து வகையான செயல்பாடுகளையும் இந்த படிப்பு உள்ளடக்கியுள்ளது. மொத்தம் 11 பேருக்கு மட்டுமே இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தப் படிப்பில் சேர ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் (DEGREE) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்றிருந்தால் போதும்.
2. எம். எப். ஏ .இன் சினிமா (ஒளிப்பதிவில் சிறப்பு பயிற்சி)
MFA IN CINEMA (WITH SPECIALISATION IN CINEMATOGRAPHY).
சினிமாவுக்கு ஏற்ற திரைக்கதைகளை சிறந்த திரைப்படமாக மாற்றுவதில் ஒளிப்பதிவாளர்கள் (CINEMATOGRAHERS )முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
எவ்வாறு ஒரு திரை கதையை படம் பிடிக்க வேண்டும் ? என்பதை பற்றிய முழுமையான தகவல்களை இந்த படிப்பு வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் நேரடி பயிற்சியையும் வழங்கி புதுமையான அனுபவத்தையும் அவர்களுக்குள் உருவாக்குகிறது.
ஒளிப்பதிவு கருவிகளை பயன்படுத்தும் முறைகள், குறும்படத்தை தயாரிக்கும் விதம் போன்றவற்றில் பலவித நுணுக்கங்களை இந்த படிப்பு கற்றுத் தருகிறது.
மேலும் ,ஒளிப்பதிவில் சிறந்த தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ளவும், திரைப்பட வரலாறு மற்றும் பகுப்பாய்வு பற்றிய தெளிவான அறிவை பெறுவதற்கும் இந்த படிப்பு உதவிகரமாக அமைகிறது.
டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்தி சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்யும் தொழில்நுட்பங்களையும் இந்த படிப்பில் கற்றுக் கொள்ளலாம். மூன்று ஆண்டுகள் இந்த படிப்பு நடத்தப்படுகிறது. மொத்தம் ஆறு செமஸ்டர்கள் பாடங்களை நடத்தி, முறையான பயிற்சிகளும் வழங்கப்படும். மொத்தம் 11 இடங்களே இந்த படிப்பில் உள்ளன.
இளநிலை பட்டப்படிப்பில் (DEGREE ) ஏதேனும் ஒரு துறையில் வெற்றி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
3. எம் எப் ஏ இன் சினிமா (படத்தொகுப்பு சிறப்பு பிரிவு)
(M.F.A.IN CINEMA (WITH SPECIALISATION IN EDITING)
சினிமா உலகில் படத்தொகுப்பு (EDITING) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், ஒரே நேரத்தில் திரைக்கதையை படம் பிடிப்பது சற்று சிரமம்.
எனவே,வெவ்வேறு சூழலில் கதைக்களம் அமையும் போது, காட்சிகளை திறம்பட படம்பிடித்து, திரைக்கதைக்கு ஏற்ப தொகுத்து வழங்குவது" எடிட்டிங் "எனப்படும் "படத்தொகுப்பு "பணியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த முதுகலை பட்ட படிப்பில் முழு நீள திரைப்படங்களை சிறந்த படத்தொகுப்பின் மூலம் எவ்வாறு உருவாக்க வேண்டும்? என்பதை கற்றுத் தருகிறார்கள்.
படத்தொகுப்போடு தொடர்புடைய தொழில்நுட்பங்கள், படத்தொகுப்பின் வரலாறு, படத்தொகுப்பின் கோட்பாடு, மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் படத்தொகுப்பின் பங்கு ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திரைப்படத்துறையில் சிறந்த எடிட்டர்களை வரவழைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், படத்தொகுப்பின் நுண்ணிய கோட்பாடுகளை விளக்கும் சிறந்த பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.
ஏராளமான திரைப்பட எடிட்டர்கள் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று உலக அளவில் புகழ்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒரிஜினல் ஆடியோ அல்லது வீடியோ கோப்புகளை மாற்றாமல் மென்பொருளை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் திருத்தி அமைக்கும் "நான் லீனியர் எடிட்டிங்" (NON LINEAR EDITING) என்னும் நவீன எடிட்டிங் முறையையும் இங்கு கற்றுத் தரப்படுகிறது.
ஆன்லைன் எடிட்டிங் அனுபவத்தையும் நேரடியாக பெரும் வசதி இங்கு உள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் (POST PRODUCTION) பற்றி முழுமையான நுணுக்கங்கள் மிகச் சிறந்த வல்லுனர்களால் கற்றுத் தரப்படுகிறது.
சினிமா கலை மற்றும் அழகியல் குறித்த நுணுக்கமான புரிதலை பெறும் வகையிலும், திரைக்கதை வடிவம் கால அளவு மற்றும் காட்சி ஒலி தொடர்புகள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ளும் வகையிலும் சிறப்பான பயிற்சிகள் அளிக்கின்றன. இந்த படிப்பு மூன்று வருட படிப்பாகும். இது மொத்தம் ஆறு செமஸ்டர்கள் கொண்டது.
4. எம் எப் ஏ இன் சினிமா (ஒலி ப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு)
(M.F.A IN CINEMA ( SOUND RECORDING AND SOUND DESIGN).
இந்தப் படிப்பு திரைப்படத்தில் சிறந்த ஒலியை உருவாக்குவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு படிப்பாகும். இப்போது தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் சிறந்த ஒலி அமைப்பு மிகவும் தேவையான ஒன்றாக அமைந்துவிட்டது.
இதனால் இந்த படிப்பில் கள ஒலிப்பதிவு, ஒலி கலவை, தயாரிப்புக்கு பின்னர் நடைபெறும் ஒலி வடிவமைப்பு ஆகிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகள் தவிர, ஒவ்வொரு காட்சியையும் எவ்வாறு ஒலியை ஒருங்கிணைத்து விவரிக்க வேண்டும்? என்பதையும் கற்றுத் தருகிறது.
தொழில் முறை பயிற்சிகள், பாட கோட்பாடு பற்றிய தெளிவான அறிவை வழங்குதல், தேவையான தொழில்நுட்ப நுணுக்கங்களை கற்றுத் தருதல் போன்றவைகளோடு சிறந்த படைப்பாற்றல் திறனையும் வளர்க்க இந்த படிப்பு பக்க பலமாக அமைகிறது.
இந்த படிப்பில் டிஸ்க் பயன்படுத்துதல், டிஜிட்டல் மற்றும் அனலாக் தொழில்நுட்பங்களை சீராக பயன்படுத்தி சிறந்த ஒலியை உருவாக்குதல், ஒலி கலவை நுட்பங்கள் , அதி நவீன ஒலி மறுபதிவு, இசை, டப்பிங், போன்ற வசதிகளும் உள்ளன.
திரைப்படம் மற்றும் அது தொடர்பான ஊடகங்களின் ஒலியை சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கும் பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
5. சி எப் ஏ. இன் சினிமா. ( ஆர்ட் டைரக்ஷன் அண்ட் ப்ரொடக்ஷன் டிசைன்) C.F.A.IN CINEMA (ART DIRECTION AND DESIGN).
ஒரு திரைப்படத்தின் காட்சி அழகியல் ,கலை இயக்கம், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய படிப்பு இது ஆகும்.
இந்தப் படிப்பு மூன்று வருட படிப்பாகும். மொத்தம் ஆறு செமஸ்டர்கள் நடத்தப்படும் இந்த படிப்பில் 11 இடங்கள் மட்டுமே உள்ளன.
கட்டிடக்கலை,(ARCHITECTURE ), உட்புற வடிவமைப்பு ( INTERIOR DESIGN) , காட்சிக் கலை (VISUAL ARTS), வடிவமைப்பு (DESIGN), பயன்பாட்டுக்கலை ( APPLIED ARTS),ஓவியம் (DRAWING) , சிற்பக்கலை (SCULPTURE ARTS) அல்லது நுண்கலைகள் (FINE ARTS,)சார்ந்த மற்ற துறைகளில் இளநிலை பட்டப்படிப்பு (DEGREE ) படித்தவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை கொண்டவர்கள் மட்டுமே இந்த படிப்பில் சேர இயலும்.
திரைப்பட தயாரிப்பில் கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இங்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
ஒரு திரைப்படத்தை தயாரிக்க மிகவும் உதவியாக அமையும் வடிவமைப்பாளராக தகுதி பெற அத்தனை பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகிறது.
புதிய ஊடகங்களின் பல்வேறு நிலைகளில் பணியாற்றுவதற்கு தேவையான அனைத்து வகையான செயல்பாடுகளையும் இந்தப் பயிற்சியில் கற்றுக் கொள்ளலாம்.
6. எம் எஃப் ஏ இன் சினிமா (திரை நடிப்பு)
M.F.A IN CINEMA (SCREEN ACTING)
இந்தப் படிப்பு இரண்டு வருட படிப்பாகும். மேடை மற்றும் திரை ஆகிய இரண்டிலும் நடிப்பில் சிறப்பிடம் பெறுவதற்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகிறது. மொத்தம் நான்கு செமஸ்டர்கள் நடத்தப்படும் இந்த படிப்பில் மொத்தம் 16 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பு. (DEGREE ) அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
இது நடிப்பு சம்பந்தப்பட்ட படிப்பாக இருந்தாலும், திரைப்பட இயக்கம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு ,திரைக்கதை எழுதுதல் ,கலை இயக்கம் போன்றவற்றிலும் தேவையான அடிப்படை அறிவை பெறுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
கற்பனைத்திறன் கொண்ட நடிப்பு, புலன் வழி பயிற்சி, உடனடி நடிப்பு போன்ற நடிப்பு வகைகளிலும் பல நுணுக்கங்கள் இங்கு கற்றுத் தரப்படுகிறது ஒரு கதாபாத்திரம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது? திரைக்கதையை எவ்வாறு பகுத்தாய்வு செய்ய வேண்டும்? கேமரா முன்பு எவ்வாறு நடிக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கான தெளிவான அறிவு பெறுகின்ற வகையில்பலவிதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
காட்சிக்கு ஏற்றவாறு நடிப்பது, தனியாக பேசி நடிப்பது, உடனடியாக நடிப்பது, கதாபாத்திரங்களை ஆய்வு செய்வது, உளவியல் அடிப்படையிலான செய்கைகளை உருவாக்குவது, குரலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவது, பேச்சில் தெளிவை உருவாக்குவது போன்றவை இங்கு வழங்கப்படும் பயிற்சிகளில் முக்கியமானதாகும்.
7. எம் எஃப் ஏ இன் சினிமா (திரைக்கதை எழுதுதல்-திரைப்படம் தொலைக்காட்சி மற்றும் வலைக்காட்சி தொடர்)
M.F.A IN SCREEN WRITING ( FILM,TV&WEB SERIES)
திரைப்படத்துறையில் திரைக்கதை எழுதுதல் மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு சிறுகதை அல்லது நாவல் அல்லது ஏதேனும் ஒரு கதையை திரைக்கதையாக மாற்றுவதற்கு தனித்திறமை தேவையானது. இதனை உணர்ந்துதான் இந்த படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வருட படிப்பாகும். மொத்தம் நான்கு செமஸ்டர்கள் இந்த படிப்பு நடத்தப்படுகிறது.
முறையான, வடிவமைக்கப்பட்ட எழுத்து பயிற்சி, திரைப்படப் பகுப்பாய்வு, சிறந்த கதை வல்லுனர்களிடமிருந்து அனுபவ அறிவை பெறுதல், சினிமா கதை சொல்லல், அறிவுசார் சொத்துரிமை, உலகத் திரைப்படம் பற்றிய அடிப்படை அறிவு ஆகியவற்றை முக்கிய அம்சமாக கொண்டு இந்த படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி தொடர்கள், வலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றிற்கு தேவையான திரைக்கதைகளை உருவாக்கும் தொழில் முறை பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
கதாபாத்திரங்களை உருவாக்குதல், அவர்களுக்கு இடையே ஏற்படும் முரண்பாடுகளை கண்டறிந்து தீர்வு சொல்லுதல், கருப்பொருளை உரிய நேரத்தில் புரிய வைத்தல், காட்சி வழியாக கதையைக் கொண்டு செல்லுதல் போன்றவற்றை பயிற்சிகளாக மாற்றி எங்கு கற்றுத் தருகிறார்கள்.
குறிப்பாக, ஒளிப்பதிவாளர்கள் நடிகர்கள் இயக்குனர்கள் எழுத்தாளர்கள் போன்ற படப்பிடிப்பு குழுவினருடன் இணைந்து பணியாற்றவும் முறையான பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது.
இங்கு நடத்தப்படும் முக்கிய முதுகலைச் சான்றிதழ் படிப்புகள்;
1. தொலைக்காட்சி (இயக்கம்) குறித்த ஓராண்டு முதுகலைச் சான்றிதழ் படிப்பு (One Year P.G. Certificate Course in Television (Direction)
2. தொலைக்காட்சி (மின்னணு ஒளிப்பதிவு) குறித்த ஓராண்டு முதுகலைச் சான்றிதழ் படிப்பு (One Year P.G. Certificate Course in Television (Electronic Cinematography)
3. தொலைக்காட்சி (காணொளித் தொகுப்பு) குறித்த ஓராண்டு முதுகலைச் சான்றிதழ் படிப்பு (One Year P.G. Certificate Course in Television (Video Editing)
4. தொலைக்காட்சி (ஒலிப்பதிவு மற்றும் தொலைக்காட்சிப் பொறியியல்) குறித்த ஓராண்டு முதுகலைச் சான்றிதழ் படிப்பு (One Year P.G. Certificate Course in Television (Sound Recording and Television Engineering)
நுழைவுத் தேர்வு.
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ( The Film and Television Institute of India) (FTII) நுழைவு தேர்வு நடத்தி முதுகலை மற்றும் பட்டய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.
இந்த நிறுவனம் சத்தியஜித்ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் (the Satyajit Ray Film and Television Institute) (SRFTI) இணைந்து ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (Joint Entrance Test) (JET) என்னும் நுழைவு தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படும்.
இந்த நுழைவு தேர்வில் எழுத்து தேர்வு இடம் பெறும். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் , மீண்டும் இறுதி அறிமுகம் மற்றும் நேர்முகத் தேர்வு (interview )மூலம் தேர்வு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்
தொடர்பு கொள்ள....
இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Film and Television Institute of India,
Law College Road,
Pune – 411 004.
(Off.): +91-20-25580010
WEBSITE : https://ftii.ac.in.