கல்வி&வேலைவாய்ப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

விண்ணப்பிக்கும் இறுதி நாள் தற்போது ஜூன் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், 2026-27 கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எதுவும் நடத்தப்படாமல், பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கியது. ஆண்டுதோறும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், இதுவரை பி.வி.எஸ்.சி & ஏ.ஹெச். படிப்புக்கு 10,678 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 5,356 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதன்மூலம் மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 16,034 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் (தலைவாசல்), உடுமலைப்பேட்டை மற்றும் தேனி (வீரபாண்டி) உள்ளிட்ட 7 அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், ஐந்தரை ஆண்டுகள் காலம் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு மொத்தம் 660 இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 17-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில், சான்றிதழ்கள் பதிவேற்றம் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் இறுதி நாள் தற்போது ஜூன் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய மாணவர்கள் [https://adm.tanuvas.ac.in](https://adm.tanuvas.ac.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

ஆனால், வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), அவர்களின் வாரிசுகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிதி ஆதரவு பெறும் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் இந்த காலநீட்டிப்பு பொருந்தாது. அவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, ஜூன் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.