கல்வி&வேலைவாய்ப்பு

மருத்துவ படிப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு..!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு வரும் 24-ம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.

சென்னை,

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, மருத்துவ மாணவர் தேர்வுக் குழுவின் இணையதளமான (http://www.tnmedicalselection.org) மூலம் நடைபெற்று வருகிறது.

24-ம் தேதி வரை அவகாசம்

மருத்துவப் படிப்பில் சேர தகுதியான மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் முதலில் கடந்த 19-ம் தேதி வரை வழங்கப்பட்டது. பின்னர், கூடுதலாக ஒரு நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது முறையாகவும் கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 24-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களது விருப்பக் கல்லூரிகளைத் தேர்வு செய்து பதிவு செய்யலாம்.

27-ம் தேதி இடஒதுக்கீடு விவரம்

கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட விவரம் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அகில இந்திய கலந்தாய்வு தாமதம்

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதன் காரணமாக, மாநில அளவிலான மருத்துவக் கலந்தாய்வுக்கான கல்லூரி தேர்வு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மாணவர் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.