கல்வி&வேலைவாய்ப்பு

படித்து முடித்ததும் வேலை வேண்டுமா?.. எழுத்துத்தேர்வில் கவனம் செலுத்துவது எப்படி?

போட்டித் தேர்வுகளிலும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளிலும் பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகள் அதிகம் இடம்பெறுகின்றன

எழுத்துத்தேர்வு - கவனம் தேவை

பொதுவாக அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளிலும் பொது அறிவு (General Knowledge) சம்பந்தப்பட்ட கேள்விகள் அதிகம் இடம்பெறுகின்றன. பொதுஅறிவை வளர்ப்பதற்காக பள்ளி - கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவிகளும், பட்டதாரிகளும் பல புத்தகங்களைப் படித்து வருகிறார்கள். இணையதளம் மூலம் தகவல்களை சேகரித்துக் கொள்கிறார்கள். பொதுஅறிவு என்றால் என்ன? அந்த பொதுஅறிவை பெருக்கிக் கொள்வதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்? என்பதைப்பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பள்ளி - கல்லூரிகளில் படிக்கும்போதே, போட்டித் தேர்வுக்கான தயாரிப்பு பணியில் ஈடுபடுவது நல்லது. பொது அறிவுப் பாடத்தை சில முக்கிய பிரிவுகளாக பிரித்து, இளம்வயதிலேயே படிக்கத் தொடங்குவது சிறந்தது.

அந்த முக்கிய பிரிவுகள் இவைதான்.

1. இந்திய வரலாறு (Indian History)

2. இந்திய மற்றும் உலக புவியியல் (India and World Geography)

3. இந்திய அரசியல் (Indian Polity)

4. இந்திய பொருளாதாரம் (Indian Economy)

5. கடல்சார் தொழில்நுட்பம் (Ocean Technology)

6. அணுசக்தி (Nuclear Power)

7. வானவியல் தொழில்நுட்பம் (Space Technology)

8. தகவல் தொழில்நுட்பம் (Information Technology)

9. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (Science and Technology)

10. உலக நிகழ்வுகள் மற்றும் அமைப்புகள் (International Affairs and Institutions)

11. தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்கால நிகழ்வுகள் (Current Events of National and International Importance)

12. சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுதல் (Environmental Ecology, Bio – Diversity, Climate Change)

13. பொது அறிவியல் (General Science)

இந்தப் பாடப் பகுதிகளில் இடம்பெறும் அடிப்படையான தகவல்களை தெளிவாக புரிந்துகொண்டால் பொது அறிவுப் பாடத்திற்கான தயாரிப்பு மிகவும் எளிதாக அமைந்துவிடும். ஒவ்வொரு பாடப்பகுதியில் இடம்பெறும் பாடத் தலைப்புகள் பற்றியும் சற்று விரிவாக தெரிந்துகொள்வோம்.

1. இந்திய வரலாறு (Indian History)

இந்திய வரலாறு பகுதியில் - இந்திய வரலாற்றோடு இணைந்த இந்தியப் பண்பாடு, பழங்கால நாகரிகம், முக்கிய இந்திய வரலாற்றுத் தலைவர்கள், வரலாற்று அமைப்புகள் ஆகியவற்றிலிருந்தும் கேள்விகள் அமையும். சமூக மற்றும் மத இயக்கங்கள், அரசியல் அமைப்புச் சட்டங்கள், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், 1947-க்கு பிறகு ஏற்பட்ட இந்திய வரலாற்று மாற்றங்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது அவசியமாகும்.

நவீன இந்தியாவில் 1857-ம் ஆண்டுக்குப்பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும், குறிப்பாக, இந்திய தேசிய இயக்கம், சுதந்திரத்திற்குபிறகு வெளிநாட்டுத் தொடர்புகள், இந்திய தேசிய காங்கிரஸ், அயல்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகள் இவைபோன்று பலவற்றையும் ஆராய்ந்து பதில் எழுதும் அளவுக்குத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

இந்திய வரலாற்றில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களையும், மறக்க முடியாத சம்பவங்களையும் சில முக்கிய நிகழ்வுகளையும் சேகரித்து வரலாற்றுப் பாடத் தயாரிப்பில் ஈடுபடுவது அவசியம்.

2. இந்திய மற்றும் உலக புவியியல் (India and World Geography)

பொது அறிவுப் பாடத்தில் இந்திய மற்றும் உலக புவியியல் பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஏற்படும் பருவகால மாற்றங்களால் இந்திய வேளாண்மையில் ஏற்படும் விளைவுகள், இந்திய தட்பவெப்ப நிலை ஆகியவற்றைப் பற்றியும் கேள்விகள் இடம்பெறும்.மக்கள் தொகை கணக்கெடுப்பில் காணப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையிலும் சில கேள்விகள் அமையலாம். பெண்கள் - ஆண்கள் விகிதம், பிறப்பு-இறப்பு விகிதம், மக்கள் தொகைப் பெருக்கம், தேசிய மக்கள் தொகைக் கொள்கை போன்றவற்றையும் இந்திய வேளாண்மை, பருவ கால மண்டலங்கள், பசுமைப் புரட்சி, மஞ்சள் புரட்சி, நீலப் புரட்சி (Blue Revolution), வெள்ளைப் புரட்சி (White Revolution) ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். சமூக - வேளாண்மைக் காடுகள், நகரமயமாக்குதல், சுற்றுலா, நிலநடுக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது புவியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும்.

3. இந்திய அரசியல் (Indian Polity)

இந்திய அரசியல் (Indian Polity) பற்றிக் கேட்கப்படும் பொதுஅறிவுக் கேள்விகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் சட்ட திருத்தங்கள், ஐந்தாண்டுத் திட்டங்கள், மக்களாட்சி, இந்தியப் பாதுகாப்பு முறைகள், இந்திய அடிப்படை உரிமைகள் போன்றவைகள் அடங்கும்.

மத்திய, மாநில அரசுகளின் உறவுகள், அரசியல் பொருளாதார நிர்வாக உறவுகள், இந்திய தேர்தல் கமிஷன், தேர்தல் சீர்திருத்தங்கள், நேர்முக, மறைமுக தேர்தல்கள், நீதித்துறை, நீதிமன்றப் பணிகள், உயர்நீதி மன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் உள்ள வேறுபாடுகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 மற்றும் 226 பிரிவு விதிகள், பொதுநல வழக்கு போன்ற தகவல்களையும் சேகரித்துத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதின்மூலம் பொது அறிவுப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.தற்காலத் தேசிய நிகழ்வுகள் மற்றும் சமூக நலம் பயக்கும் தலைப்புகளில் பொது அறிவுப் பாடத்திற்காகத் தயார்செய்வது அவசியம் ஆகும். குறிப்பாக - மனித உரிமைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பெண்கள் முன்னேற்றம், தொழிலாளர் நலம், ஏழ்மை, பொதுவாழ்வில் ஊழல், உடல் நலம் போன்ற தலைப்புகளில் செய்திகளைச் சேகரித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தீவிரவாதிகள் பிரச்சினை, மனித உரிமை மீறல், குழந்தைத் தொழிலாளர்களால் ஏற்படும் சமூகப் பொருளாதார மாற்றங்கள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள், தேசிய மக்கள்தொகைக் கொள்கை, தொழிலாளர்கள் சட்டத்திருத்தம், சுற்றுப்புறச் சூழல் பிரச்சினைகள், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தீவிரவாதத் தாக்குதல் இந்தியாவில் ஏற்படுத்திய விளைவுகள், தேசிய அமைப்புகள், தேசியக் குழுக்கள், மீனவர் பிரச்சினைகள், கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம், முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றியும் பொது அறிவுப் பாடத்தில் அதிகக் கேள்விகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

இவைதவிர - கடந்த 2015ம் ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம், நிதி ஆயோக் என்னும் அமைப்பு, மங்கள்யான் குழுவுக்கு விருது, கிரிக்கெட் சூதாட்டம், அக்னி-5 ஏவுகணை, லோக் அதாலத், பாரத பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள், காவிரியின் மேகதாது, சென்னை கடலூர் வெள்ள பாதிப்புகள், அப்துல்கலாம் மறைவு - போன்ற பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் திரும்பவும் விளக்கமாகத் தெரிந்துகொள்வது சிறந்ததாகும்.

4. இந்தியா மற்றும் உலக உறவுகள் (India and the World Relationship)

இந்தியா மற்றும் உலக உறவுகள் (India and the World Relationship) என்னும் பகுதியில், இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்குமுள்ள உறவுகளைப் பற்றியும், தொடர்புகளைப் பற்றியும் கேள்விகள் இடம்பெறும். உலக அளவிலான சட்டங்களைப் பற்றியும் (International Law) கேள்விகள் இடம்பெறும். யு.எஸ்.-ஆப்கான் போர், இந்திய - அமெரிக்க உறவுகள், தெற்கு ஆசிய நாடுகளின் உறவுகள், உலக நாடுகளின் உறவுகள் ஆகியவற்றைப் பற்றியும் தகவல்கள் சேகரித்துப் பொதுஅறிவுப் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெறலாம்.

உலகளாவிய தீவிரவாதம், சுற்றுலாத் துறையின்மூலம் கிடைக்கும் வருமானம் உலகளாவிய வர்த்தகத்தின்மூலம் பன்னாட்டு உறவுகளின் தன்மைகள் என்பவை பற்றியும் பொது அறிவுக் கேள்விகள் அமையும். இவை தவிர, ஈரான், ரஷ்யா, பாகிஸ்தான், பங்களாதேசம், நேபாளம், மத்திய ஆசியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அணுக்கொள்கைகள், கடல் வணிகம், ஏற்றுமதியின் நிலை, இந்தியக் கடலில் இந்தியாவின் நிலை போன்றவற்றோடு WTP, ASEAN, SAARC, G – 8, G – 20, G – 15 போன்றவற்றை பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருப்பது போட்டித்தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற உதவும்.

5. இந்தியப் பொருளாதாரம் (Indian Economy)

இந்தியப்பொருளாதாரம் (Indian Economy) பாடத்தில் - இந்தியப் பொருளாதாரத்தின் மாற்றங்கள் குறிப்பாக - பொருளாதாரத் தாரளமயமாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டபின் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், பொருளாதார மாற்றத்தினால் தொழிற்சாலை மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விளைவுகள், இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள், ஐந்தாண்டுத் திட்டங்களினால் வேளாண்மை, உடல்நலம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகிய துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், திட்டக் கமிஷன், தேசியவளர்ச்சிக்குழு, மாறுபடும் பொருளாதாரச் சூழ்நிலை, வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment) பற்றியும் பொதுஅறிவுப் பாடத்தில் கேள்விகள் அமையும்.மேலும், வேளாண் சந்தையியல், தேசிய வேளாண் கொள்கை, வேளாண் காப்பீடு, சிறு தொழில்கள் மற்றும் குழந்தை தொழில்கள் ஆகியவற்றைப் பற்றியும் நன்கு தெரிந்துகொண்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.எழுத்துத் தேர்வில் இடம்பெறும் பொதுஅறிவு பகுதியின் இன்னும் சில பிரிவுகளைப் பற்றி அடுத்த இதழில் சிந்திப்போம்.

தொடரும்.

SCROLL FOR NEXT