Image credits : AI 
கல்வி&வேலைவாய்ப்பு

ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்குவது எப்படி? கல்வித் தகுதி முதல் தேர்வு முறை வரை!

எந்தப் பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருந்தாலும் இந்த சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதலாம்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகள்

‘ஐ.ஏ.எஸ்.’எனப்படும் இந்திய ஆட்சிப் பணி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மாவட்ட கலெக்டர்களாகவும், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களாகவும், முக்கிய அரசு நிறுவனங்களிலும் நியமிக்கப்படுவார்கள். மேலும், மத்திய அரசின் பல்வேறு பணிகளில் தற்காலிகமாகப் பணிபுரிவதற்காகவும் பணி மாற்றம் செய்யப்படுவார்கள்.

‘ஐ.பி.எஸ்.’ எனப்படும் இந்தியன் போலீஸ் சர்வீஸ் என்பது நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறை ஆகும். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளில் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகப் பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும். இவர்கள் காவல் துறையில் சேர்ந்ததும், தொடக்க காலத்தில் ‘உதவி காவல் கண்காணிப்பாளர்’ என்ற பதவியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பின்னர், மாநிலத்தின் தலைமை காவல்துறை அதிகாரி பணியான ‘டி.ஜி.பி.’ என்ற நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.

ஐ.பி.எஸ். பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளான CBI (Central Bureau of Investigation), CRPF (Central Reserve Police Force), BSF (Border Security Force), RAW (Research and Analysis Wing), Central Industrial Security Force (CSIF) மற்றும் Intelligence Bureau ஆகியவற்றில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன.

‘ஐ.எப்.எஸ்.’ (I.F.S.) எனப்படும் இந்திய அயல்நாட்டுப் பணி (Indian Foreign Service) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களில் (Indian Embassies) அதிகாரியாகப் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. இந்த அதிகாரிப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பல நாடுகளின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

இந்திய அயல்நாட்டுப் பணி (I.F.S) அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, சார்க் (SAARC) நாடுகளின் அமைப்பு, யுனெஸ்கோ (UNESCO) ஆகிய அமைப்புகளில் பணிபுரிவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பாஸ்போர்ட் அதிகாரிகளாகவும் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

‘இந்திய வருவாய் பணி’ (I.R.S) எனப்படும் Indian Revenue Service பணி என்பது வருமான வரி சம்பந்தப்பட்ட பணியாகும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடக்கக் காலத்தில் Assistant Commissioner of Income Tax பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன்பின்னர் பல்வேறு பதவி உயர்வுக்குப் பிறகு Chief Commissioner of Income Tax என்ற பொறுப்பான பதவி வகிக்கவும் வாய்ப்புள்ளது.

“Indian Customs and Central Excise Service” என்னும் பிரிவு சுங்கம் மற்றும் கலால் வரித்துறை சம்பந்தப்பட்ட பணியாகும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் சுங்க வரித்துறையில் “Assistant Commissioner” பணியில் அமர்த்தப்படுவார்கள். பதவி உயர்வு பெற்றபின் முக்கிய பதவியான Chief Commissioner of Customs and Central Excise, Chairman, Board of Direct Taxes மற்றும் Chairman, Board of Customs and Central Excise போன்ற உயர்பணிகளிலும் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.

இதுபோன்றே மற்ற உயர் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு வகையான பதவி உயர்வுகள் வழங்கப்படும்.

கல்வித் தகுதி

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் (Degree) கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.

எந்தப் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் இந்தத் தேர்வை எழுதலாம். அதாவது - பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.ஏ., பி.சி.டி., பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ். போன்ற ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம்.

மேலும் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.எல். போன்ற பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் இந்தத் தேர்வை எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இதுதவிர எம்.பில்., பி.எச்.டி. போன்ற ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களுக்கும் இந்தத் தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

எந்தப் பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருந்தாலும் இந்த சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதலாம் என்பது பட்டதாரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி ஆகும்.

வயது வரம்பு

ஒரு போட்டியாளர் எந்த ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பம் செய்கிறாரோ, அந்த ஆண்டில் ஆகஸ்டு முதல் நாளன்று குறைந்தபட்சம் 21 வயது நிறைந்தவராகவும், அதிகபட்சம் 32 வயது நிறைந்தவராகவும் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.

1. OBC (Other Backward Class) இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் - 3 ஆண்டுகள் (அதிகபட்ச வயது 35).

2. SC/ST தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள் - 5 ஆண்டுகள் (அதிகபட்ச வயது 37).

3. பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் போன்ற மாற்றுத்திறனாளிகள் - 10 ஆண்டுகள் (அதிகபட்ச வயது 42).

4. முன்னாள் ராணுவத்தினர் - 5 ஆண்டுகள் (அதிகபட்ச வயது 37).

தேர்வு முயற்சிகள்

"நான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவன். எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. என்னால் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியுமா?" என்று சிலர் தேர்வு எழுதத் தயங்குகிறார்கள்.

இந்தத் தேர்வில் ஒருமுறை வெற்றி பெறவில்லையென்றால் மீண்டும் அடுத்தமுறை எழுதி வெற்றி பெறலாம். ஒருவர் பொதுவாக சிவில் சர்வீசஸ் தேர்வை 6 முறை எழுதலாம்.

ஒருமுறை முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) எழுதினாலே ஒரு முயற்சியாக (Attempts) கணக்கிடப்படும். முதல்நிலைத் தேர்வு எழுதச் சென்று பதிவு எண்ணை (Register Number) விடைத்தாளில் குறிப்பிட்டுவிட்டால் அது ஒரு முயற்சியாகக் கருதப்படும்.

இதர பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் (Other Backward Class) 9 முறை இத்தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் (SC/ST) 21 வயது முதல் 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 47 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தேர்வு அறிவிப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பை 'எம்ப்ளாய்மென்ட் நியூஸ்' (Employment News) என்னும் ஆங்கில வார இதழில் விரிவாகக் காணலாம்.

தேர்வுக் கட்டணம்

சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வு (Civil Services Preliminary Examination) எழுத விரும்புபவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/- செலுத்த வேண்டும். பெண்கள் இந்தத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதேபோல் தாழ்த்தப்பட்டோர் (Schedule Caste), பழங்குடி இனத்தவர் (Scheduled Tribe) மற்றும் உடல் ஊனமுற்றோர் (Physically Handicapped) ஆகியோர் இந்தத் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (State Bank of India) இந்தியாவின் ஏதேனும் ஒரு கிளையில் பணமாகச் செலுத்தலாம். அல்லது இணைய வங்கி மூலம் (Internet Banking) செலுத்தலாம். வங்கியில் நேரில் சென்று பணம் செலுத்த விரும்பாதவர்கள் கிரெடிட் கார்டு (Credit Card) மற்றும் டெபிட் கார்டு மூலம் (Debit Card) பணம் செலுத்தலாம்.

இதுதவிர ஸ்டேட் பேங்க் ஆப் பிகானர் அண்ட் ஜெய்ப்பூர் (State Bank of Bikaner and Jaipur), ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் (State Bank of Hyderabad), ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் (State Bank of Mysore), ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா (State Bank of Patiala), ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர் (State Bank of Travancore) ஆகிய வங்கிகளிலும் தேர்வுக் கட்டணம் செலுத்தலாம்.

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான (Civil Services Main Examination) தேர்வுக் கட்டணம் ரூபாய் 200/- ஆகும்.

தேர்வு மையம்

சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது.

இதர விவரங்கள்

மேலும் விவரங்களுக்கு புதுடெல்லியில் உள்ள யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகத்திற்கு நேரில் தொடர்பு கொள்ளலாம். அதன் முகவரி:

Union Public Service Commission,

Dholpur House,

Shajahan Road,

New Delhi – 110 069.

www.upsc.gov.in

சிவில் சர்வீஸ் தேர்வு பற்றிய விவரங்களை தொலைபேசி மூலம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்போடு தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

1. 011 – 23385271

2. 011 – 23381125

3. 011 – 23098543

சிவில் சர்வீஸ் தேர்வை எழுத விரும்புபவர்கள் தேர்வுக்கான பாடத்திட்டங்களையும் தெரிந்து கொள்வது நல்லது. பாடத்திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் அடுத்து சிந்திப்போம்.

SCROLL FOR NEXT