கல்வி&வேலைவாய்ப்பு

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு, தயாராவது எப்படி...?

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு இந்த தேர்வை நடத்துகிறது.

இந்தியாவிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (NATIONAL LAW UNIVERSITY) சேர்ந்து சட்டம் தொடர்பான பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகிய படிப்புகளில் சேர்ந்து படிக்க நடத்தப்படும் தேர்வு காமன் லா அட்மிஷன் டெஸ்ட் COMMON LAW ADMISSION TEST ( CLAT) ஆகும்.

இந்தத் தேர்வை, தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ( CONSORTIUM OF NATIONAL LAW UNIVERSITIES) (CNLU) என்னும் அமைப்பு நடத்துகிறது.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், முன்பு இந்தியாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் BACHELOR OF LAW (B.L) என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட , தற்போது லத்தீன் மொழியில் அழைக்கப்படும் எல். எல். பி (LEGUM BACCALAUREUS)(LLB) என்னும் பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

மேலும் ,முன்பு இந்தியாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் MASTER OF LAW (M.L) என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட , தற்போது லத்தீன் மொழியில் அழைக்கப்படும்  எல் .எல். எம் (LEGUM MAGISTER) (LLM) என்னும் பட்ட மேற்படிப்பில் சேர்ந்தும் படிக்கலாம்.

சில முக்கிய தகவல்கள்.

பொதுவாக இந்த தேர்வு பற்றிய அறிவிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வெளியிடப்படும். தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும். (கடந்த ஆண்டு (2025) இந்த தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்).

பொதுவாக , எல் எல் பி படிப்பில் சேர ஆண்டுதோறும் சுமார் 75,000 பேர் விண்ணப்பம் அனுப்புகிறார்கள். அதேபோல் எல் எல் எம் என்னும் படிப்பில் சேர சுமார் 17,000 பேர் விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.எல். பி (L.L.B) படிப்பு.

முறையாக சட்டக் கல்வி பயின்று சிறந்த சட்ட வல்லுனராக பெயரும் புகழும் பெறுவதற்கு அடிப்படையாக அமைவது எல் எல் பி எனப்படும் சட்ட கல்வியாகும். இந்த கல்வி  கீழ்கண்ட பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

1. 3 ஆண்டு எல்.எல்.பி படிப்பு ( 3years LL.B. Degree Programme )

முறையாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் (DEGREE COURSE )வெற்றி பெற்றவர்கள், இந்த மூன்று ஆண்டு எல்எல்பி என்னும் சட்டக் கல்வியில் சேர்ந்து படிக்கலாம்.

இந்த சட்டக் கல்வி பயில வயது வரம்பு ஏதுமில்லை. எந்த வயதிலும் சட்டக் கல்வி படிக்கும் வாய்ப்பை இந்த படிப்பு வழங்குகிறது.

பட்டம் படித்த பின்பு, மீண்டும் மூன்று ஆண்டுகள் சட்டக் கல்வியை முறையாக படிப்பதால் சட்டத்துறையில் மிகச்சிறந்த வெற்றியை எளிதில் பெற இயலும். 

இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சட்டம், இந்திய தண்டனை சட்டம் ,ஒப்பந்த சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு, சொத்துரிமைச் சட்டம் ,குடும்பச் சட்டம் ,சிவில் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் - என பல்வேறு சட்ட சம்பந்தப்பட்ட பாடங்கள் முறையாக கற்றுத் தரப்படுவதால் இந்த படிப்பில் நிறைய பேர் விரும்பி சேர்ந்து படிக்கிறார்கள்.

இவை தவிர ,மாதிரி நீதிமன்ற பயிற்சிகள் சட்ட ஆலோசனை மையங்கள் உள்ளக பயிற்சிகள் போன்ற பல செய்முறை பயிற்சிகளும் இந்தப் படிப்பில் சேர்ந்து படிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

2. ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எல்.எல். பி படிப்பு.

(5years BA.LL.B. Law Degree Programme)

மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்த மாணவ மாணவிகள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம். அதாவது பிளஸ் -2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

20 வயது முதல் 22 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த படிப்பில் சேர இயலும் என சில கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை வகுத்துள்ளது.

கல்வித் தகுதிகள்

மூன்று ஆண்டு எல்.எல்.பி (3years LL.B. Degree Programme)  படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் பிளஸ் -2 தேர்வில் குறைந்தபட்சம் 45 முதல் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். 

ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எல்.எல்.பி (5years BA.LL.B. Law Degree Programme)படிப்பில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இருந்த போதும் சில பல்கலைக்கழகங்களில் அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

நுழைவுத் தேர்வின் அமைப்பு

பொதுவாக இந்த CLAT நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மொத்தம் 120 கேள்விகள் கொண்ட வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு மணி நேரம் இந்த தேர்வு நடத்தப்படும். 

சரியான  விடைகளுக்கு ஒரு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் அதே வேளையில் தவறான விடைகளுக்கு 0.25 அளவில் மதிப்பெண்கள் குறைக்கப்படும். 

வினாத்தாள் அமைப்பு முறை

நுழைவுத் தேர்வில் கீழ்க்கண்ட பிரிவுகளில் வினாத்தாள் அமைக்கப்பட்டிருக்கும்.

• ஆங்கிலம்: வாசிப்புப் புரிதல் (English Reading comprehension),

• ஊகித்தல் (inference),

• சூழலுக்கு ஏற்ற சொற்களஞ்சியம் (vocabulary in context)

• பொது அறிவு / நடப்பு நிகழ்வுகள்( General Knowledge / Current Affairs),

• நிலையான பொது அறிவு (static GK),

• சட்டச் செய்திகள்( legal news)

• சட்டரீதியான பகுத்தறிவு( Legal reasoning)

• சிவில் தவறுகள், (Torts),

• ஒப்பந்தங்கள் (contracts),

• அரசியலமைப்பு ( constitution),

• குடும்பச் சட்டம் ( (family law)

• தர்க்கரீதியான பகுத்தறிவு (Logical reasoning)

• வாதப் பகுப்பாய்வு (Argument analysis),

• முடிவுகள் (conclusions,

• ஊகித்தல் inference),

• வடிவங்கள் (patterns)

• அளவுசார் கணிதம் (Quantitative Arithmetic),

• விகிதங்கள் (ratios),

• தரவு விளக்கம் (10 (data interpretation) (Class 10 level)

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு ரூபாய் 4000. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் (BELOW POVERTY LINE) (BPL) விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 3500 செலுத்தினால் போதும்.

தேர்வு தயாரிப்புக்கு உதவும் சில குறிப்புகள்.

1. பொது அறிவு பகுதியை மிகுந்த கவனத்தோடு படிக்க வேண்டும். குறிப்பாக சுமார் 12 மாதங்கள் தற்கால நிகழ்வுகள் (CURRENT AFFAIRS) பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்வது நல்லது.

2. முந்தைய வருடங்கள் நடத்தப்பட்ட CLAT தேர்வில் இடம் பெற்ற வினாத்தாள்களை முழுவதுமாக புரிந்து கொண்டு அதற்கு தெளிவான விடை அளிக்க பழகிக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் நான்கு ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை சேகரித்து விடை எழுத பழகிக் கொள்வது சிறந்தது.

3. நாள்தோறும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நாளிதழ்களில் இடம்பெறும் ஆசிரியர் பக்கம் (EDITORIAL PAGE) பகுதியை மிகவும் கவனத்துடன் படித்து குறிப்பு எடுத்து மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது.

4. தேர்வில் இடம் பெறும் Reading Comprehension பகுதி பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு அந்தப் பகுதியில் இடம்பெற்ற கேள்விகளுக்கு விரைவாக பதில் எழுத பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக ,போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்கள் சரியான விடைகளை விரைவாக எழுதி பழகிக் கொள்வது வெற்றிக்கு பக்க பலமாக அமையும்.

5. சட்டம் சம்பந்தப்பட்ட தகவல்களைத் திரட்டி நன்கு படித்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக-CONTRACT, TORT, FAMILY LAW,CONSTITUTIONAL LAW போன்ற சட்டங்களை தெளிவாக நினைவில் நிறுத்துவது நல்லது.

6. மாதிரி தேர்வுகளை (MOCK TESTS) தொடர்ந்து எழுதி அதற்கான விடைகளை சரி பார்த்து கொள்வதன் மூலம் சிறந்த வெற்றியை பெறலாம். 

தொடர்பு கொள்ள....

இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

The Consortium of National Law Universities

P.O. Bag 7201,

Nagarbhavi,

Bangalore - 560 072

Karnnataka,

India

Email: clat@consortiumofnlus.ac.in

Contatct Number : 08047162020