சென்னை,
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 5-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அதன்படி, 2 லட்சத்து 45 ஆயிரத்து 220 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருக்கின்றனர். விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தவர்களுக்கு சான்றி தழ் சரிபார்ப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவு பெற்றதும் வருகிற 29-ந்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது.
பொதுவாக மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மையமாக வைத்தே என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வும் இருக்கும். ஏனென்றால், என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தவர்கள், மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்ததும் அங்கு சென்றுவிடுவதால், என்ஜினீயரிங் படிப்பில் அந்த காலி இடம் அப்படியே தேங்கிவிடும். இதனை கருத்தில் கொண்டே என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்தப்படும்.
இந்த நிலையில் நடப்பாண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு தற்போது மறுதேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த நடைமுறையால் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தாமதம் ஆகும். அதன்படி, பார்க்கையில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வும் தள்ளிப்போக வாய்ப்பு இருக்குமா? என்ற கேள்வி மாணவ-மாணவிகள், பெற்றோர் மத்தியில் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, 'தற்போது வரை ஏற்கனவே வெளியிட்டிருந்த கால அட்டவணைப்படியே கலந்தாய்வு நடைமுறைகள் சென்று கொண்டிருக்கின்றன. அரசு எடுக்கு முடிவை பொறுத்தே கலந்தாய்வு தள்ளிப்போகுமா? என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும். ஆனால் இப்போது வரை அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை' என்றனர்.