அதிக மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருந்தாலும், வேலைக்கு போட்டித்தேர்வு ஏன் அவசியமாகிறது என்ற கேள்விக்கான பதிலை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.
“நான் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியிருக்கிறேன். 92 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். பட்டம் பெற்று மூன்று ஆண்டுகளாகிவிட்டது. இன்னும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. படித்தவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியாவிட்டால், இத்தனை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எதற்கு இருக்கின்றன?” என்று வேலையில்லா பட்டதாரிகளில் சிலர் வேதனைக் குரல் எழுப்புவதை நாம் இன்றும் காணலாம்.
“நன்றாகப் படித்து பட்டம் பெற்றவர்களை நிறுவனங்கள் அழைத்து உடனடியாக வேலை கொடுக்க வேண்டும். எங்களுக்கு வேலை தர ஏன் போட்டித்தேர்வை நடத்துகிறார்கள்? நான் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று பட்டம் பெற்றிருக்கிறேன். இதற்குபின்பும் தேர்வை எழுதினால்தான் வேலை தருவேன் என்கிறார்கள்? இது நியாயமா? என்றும் அச்சம் கலந்த உணர்வுகளோடு சில இளைஞர்கள் தவிக்கிறார்கள்.
"போட்டித்தேர்வு" எனப்படும் "காம்பெடிட்டிவ் எக்ஸாமினேஷன்' (Competitive Examination) என்னும் தேர்வை வேலை வழங்கும் நிறுவனங்கள் ஏன் நடத்துகின்றன? என்ற கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொண்டால், இப்படிப்பட்ட வருத்தங்களும், குழப்பங்களும் இனிவரும் காலங்களிலாவது இளைஞர்களின் மனதில் பதியாமல் இருக்கும்.
பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஒருவரை வேலைக்கு தேர்ந்தெடுக்கும்போது, அவரைப்பற்றி அறிந்துகொள்வதற்கு பல்வேறு தேர்வுகளை நடத்துகிறார்கள். அவற்றை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒருவருக்கு ஒரு நிறுவனம் வேலை கொடுப்பதற்குமுன்பு, “இவர் நமது நிறுவனத்திற்கு ஏற்ற நபர்தானா?" என்பதை அறிந்துகொள்ள பலவித தேர்வுகளை நடத்தினாலும் அவற்றை மூன்று மிக முக்கியப் பிரிவுகளாக பிரித்துக்கொள்ளலாம்.
அவை
1. எழுத்துத் தேர்வு (Written Examination)
2. குழு விவாதம் (Group Discussion)
3. நேர்முகத் தேர்வு அல்லது ஆளுமை தேர்வு (Interview and Personality Test)
ஆகியவை ஆகும்.
ஒரு நிறுவனத்தில் வேலை வழங்குவதற்குமுன்பு முதன்முதலில் நடத்தப்படும் தேர்வு 'எழுத்துத் தேர்வு' ஆகும்.
எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்தில் 75 காலிப் பணியிடங்கள் உள்ளன என வைத்துக்கொள்வோம். அந்தப் பதவிகளைப் பெற சுமார் 8,300 பேர் போட்டிபோடுகிறார்கள். இவர்களில் தகுதியானவர்களை எப்படித் தேர்வு செய்வது? அத்தனைபேரையும் அழைத்து நேர்முகத் தேர்வு நடத்துவது என்பது இயலாத நிலை அல்லவா! எனவேதான் நிறுவனங்கள் எழுத்துத் தேர்வை நடத்துகின்றன.
ஒரு கேள்வித்தாளை (Question Paper) தயாரித்து, அந்த கேள்வித்தாளின் நகல்களை அனைத்து போட்டியாளர்களுக்கும் வழங்கி, தேர்வு எழுதச் செய்து அந்தத் தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சரியான பணியாளர்களை கண்டறிகிறார்கள். இதனை 'ஸ்கிரீனிங் டெஸ்ட்' (Screening Test) என்றும் ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அதாவது 'வடிகட்டும் தேர்வு' என்றும் தமிழில் குறிப்பிடுவார்கள்.
பெரும்பாலும், எல்லா நிறுவனங்களும் எழுத்துத் தேர்வை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வதை விரும்புகின்றன. எழுத்துத் தேர்வை இருவகையாகப் பிரிகலாம்.
அவை
(அ) கொள்குறி வகை கேள்விகள் (Objective Type Questions) தேர்வு
(ஆ) விரிவான விளக்க வகை கேள்விகள் (Descriptive Types Questions) தேர்வு
ஆகியவை ஆகும்.
"கொள்குறி வகை " (Objective Type Questions) 'மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின்ஸ்' (Multiple Choice Questions) (MCQ) தேர்வு என்றும் குறிப்பிடுவார்கள். இந்த வகைத் தேர்வில் ஒரு கேள்வி கொடுக்கப்பட்டு, அந்தக் கேள்விக்கு பதில்களாக நான்கு பதில்களை கொடுத்திருப்பார்கள். அந்த நான்கு பதில்களிலிருந்து மிகச் சரியான பதில் எது? என்பதைத் தேர்ந்தெடுத்து சரியான பதிலை போட்டியாளர் எழுத வேண்டும்.
உதாரணமாக ஒரு கேள்வி.
யாருடைய பிறந்தநாள் “ஆசிரியர் தினமாக” செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது?
(a) ஜவஹர்லால் நேரு
(b) டாக்டர். இராதாகிருஷ்ணன்
(C) டாக்டர். இராஜேந்திர பிரசாத்
(d) டாக்டர். அப்துல்கலாம்
இந்தக் கேள்விக்கு மிகச் சரியான விடை (b) ஆகும்.
கொள்குறி வகை வினா தேர்வு எழுதுபவர்கள், கேள்விக்கான பதிலை முழுமையாக எழுதுவதற்குப் பதில் அந்த பதிலோடு இணைந்துள்ள ஆங்கில எழுத்து அல்லது எண்ணை குறிப்பிட்டால் போதும்.
"கேள்வியைக் கொடுத்துவிட்டு விடைகளையும் கொடுத்துவிடுகிறார்கள். எனவே இந்தத் தேர்வு எழுதுவது மிகவும் எளிது” என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால், இந்தத் தேர்வு எழுதுபவர்களுக்கு மிகச்சரியான விடை தெரிந்தால் மட்டுமே எளிதாக பதில் எழுத முடியும். இந்தத் தேர்வு எழுத சரியான தயாரிப்பை மேற்கொள்ளாதவர்களுக்கு இவ்வகைக் கேள்விகள் குழப்ப மனநிலையை எளிதில் உருவாக்கிவிடும்.
பொதுவாக இந்த "கொள்குறி வகை கேள்விகள்” தேர்வு சுமார் 2 மணி நேரம் நடத்தப்படும். மொத்தம் 200 அல்லது 250 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வை நடத்துவார்கள். ஒரு கேள்விக்கு 2 அல்லது 2½ மதிப்பெண்கள்வரை வழங்கப்படும். இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை மட்டும் 'விரிவான விளக்க வகை கேள்விகள் தேர்வு” எழுத அனுமதிப்பார்கள்.
"நான் பிளஸ் 2 வரை தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். எனவே என்னால் தமிழில் மட்டும்தான் எழுத முடியும்”. "நான் இங்கிலீஷ் மீடியத்தில் படித்து பட்டம் பெற்றிருக்கிறேன். எனக்கு தமிழ் தெரியாது”. இப்படி எழுத்துத் தேர்வுக்கான தயாரிப்பை ஆங்கில வழியில் (English Medium) மேற்கொள்ளவா? அல்லது தமிழ் வழியில் மேற்கொள்ளவா? என்பதை முடிவு செய்வதில் சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது.
போட்டித் தேர்வுக்கு தயார் செய்பவர்கள் தமிழ் வழியிலும், ஆங்கில வழியிலும் தங்கள் பதிலை எழுதுவதற்கான தயாரிப்பை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், மத்திய அரசு நடத்துகின்ற போட்டித் தேர்வுகளில் பெரும்பாலும் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அமையும். இதைப்போலவே, தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளின் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இடம்பெறுகின்றன. எந்த மொழியில் கேள்விகள் இடம்பெற்றாலும் அந்தக் கேள்விகளை சரியாகப் புரிந்துகொள்ளவும், அதற்கான பதில்களை சரியாக இனம் கண்டுகொள்ளவும் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழி அறிவு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.
எனவே, தமிழ்வழியில் படிப்பவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பாடங்களைப் படிக்கும்போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தங்கள் பாடங்கள் பற்றிய விளக்கங்களை தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான், எந்த விதமான போட்டித் தேர்வையும் எந்த நேரத்திலும் எளிதாக சந்தித்து வெற்றிபெற இயலும்.
எழுத்துத் தேர்வில் விளக்கமான விடைகளை போட்டித்தேர்வு எழுதுபவர்கள் எழுதுவதற்காக ஏதுவாக அமைக்கப்பட்ட தேர்வு "விரிவான விளக்க வகை கேள்விகள் தேர்வு" (Descriptive Type Questions) ஆகும். இந்தத் தேர்வில் பெரும்பாலும் கேள்விகள் ஒரே வாக்கியத்தில் இடம்பெறும். ஆனால், பதில் எழுதுபவர்கள் மிக விரிவான முறையில் ஆய்வுசெய்து, தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக்கொண்டு தெளிவான முறையில் குறிப்பிட்ட சொற்களுக்குள் பதில் எழுத வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
ஒரு கேள்விக்கு போட்டியாளர் எப்படி பதில் எழுதுகிறார்? என்பதைப் பொறுத்தே அவருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வும் சுமார் 2 அல்லது 3 மணி நேரம் நடைபெறும். சுமார் 200 அல்லது 300 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வு எழுதுவதற்கான மொத்த நேரமும், தேர்வுக்கான மொத்த மதிப்பெண்களும் தேர்வின் தன்மைக்குஏற்ப மாறுபடும்.
விரிவான விளக்க வகை கேள்விகள் தேர்வு மிக உயர்ந்த பணிகளுக்காக நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் மட்டுமே இடம்பெறுகிறது. குறிப்பாக, மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு (Civil Services Examinations) போன்ற உயர் பதவிக்கான தேர்வுகள் தமிழக அரசு நடத்தும் குரூப் 1 (Group I) மற்றும் குரூப் 2 (Group II) போன்ற உயர்ந்த பதவிகளுக்கான தேர்வுகள், வங்கி அலுவலர் தேர்வு (Bank Probationary Officer Exam) போன்ற பல உயர்பணிகளுக்காக இவ்வகை தேர்வு நடத்தப்படுகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் இடம்பெற்ற விரிவான விளக்க வகை கேள்விகள் இவை.
1. With greater power comes greater responsibility.
2. Is the growing level of competition good for the youth?
3. Are the standardised tests good measure of academic ability or progress?
4. Words are sharper than the two - edged sword.
5. Was it the policy paralysis or the paralysis of implementation which slowed the growth of our country?
6. Fifty Golds in olympics: Can this be a reality for India?
7. Tourism: Can this be the next big thing for India?
இதைப்போலவே, சில போட்டித்தேர்வுகளில் தமிழிலும் கேள்விகள் இடம்பெறும்.
1. 'மேக் இன் இந்தியா' திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?
2. நோபல் பரிசுகள் உலக சாதனைக்கு துணை நிற்கிறதா?
3. நாட்டின் முன்னேற்றத்தில் சிறு தொழில்களின் பங்கு என்ன?
4. தமிழகத்தின் இயற்கை பேரிடர்கள் கற்றுத்தந்த பாடம் என்ன?
இத்தகைய கேள்விகளுக்கு புள்ளி விவரத்தோடு சரியான பதில்களை வழங்க தரமான தயாரிப்பு (Preparation) தேவை என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.
எழுத்துத் தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொள்வது எப்படி?
தொடரும்.