சென்னை,
ஜே.இ.இ. ‘அட்வான்ஸ்டு' தேர்வு முடிவு
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்கள், என்.ஐ.டி.க்கள் மற்றும் முன்னணி என்ஜினீயரிங் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப் படுகிறது. அதன்படி, ஜே.இ.இ. முதன்மைத்தேர்வில் வெற்றி பெற்று தகுதி பெறக்கூடிய மாணவ-மாணவிகள் அடுத்தகட்டமாக ஜே.இ.இ. 'அட்வான்ஸ்டு' தேர்வை எழுத முடியும்.
அந்த வகையில் ஜே.இ.இ. 'அட்வான்ஸ்டு' தேர்வு கடந்த மாதம் (மே) 17-ந்தேதி காலை மற்றும் மாலையில் தாள்-1, தாள்-2 தேர்வாக நடைபெற்றது. பொதுவாக 'அட்வான்ஸ்டு' தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஐ.ஐ.டி. தலைமையேற்று நடத்தும். இந்த ஆண்டு ரூர்கே ஐ.ஐ.டி. நடத்தியது.
இந்த தேர்வை எழுத 1 லட்சத்து 87 ஆயிரத்து 389 மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 694 பேர் 2 தாள்களையும் எழுதினார்கள். அவ்வாறு தேர்வு எழுதியவர்களில் 56 ஆயிரத்து 880 பேர் தகுதி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதலிடம் பெற்ற டெல்லி மாணவர்
அவர்களில் 10 ஆயிரத்து 107 மாணவிகள், 46 ஆயிரத்து 773 மாணவர்கள் ஆவார்கள். 3-ம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் தேர்வு எழுதிய நிலையில் அவர் தேர்ச்சி பெறவில்லை. தேர்வர்கள் தங்களது முடிவுகளை jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மொத்தம் 360 மதிப்பெண்ணுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அதில் டெல்லி ஐ.ஐ.டி. மண்டலத்தைச் சேர்ந்த சுபம்குமார் என்ற மாணவர் 330 மதிப்பெண் எடுத்து முதலிடத்தை பெற் றிருக்கிறார்.
அவரை தொடர்ந்து கபீர் சில்லார் என்ற மாணவர் 329 மதிப்பெண் எடுத்து 2-வது இடத்தையும், ஜதின் சஹார் என்ற மாணவர் 319 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் அகில இந்திய அளவில் 77-வது இடத்தை பெற்ற ஆரோகி தேஷ்பாண்டே என்ற மாணவி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
"கடந்த 2 ஆண்டுகளாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுக்காக தயாராகி வந்தேன். எனது கடின உழைப்பு எனக்கு ஒரு நல்ல தரவரிசையைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. தற்போது அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதால், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்' என்று முதலிடத்தை பெற்ற சுபம் குமார் தெரிவித்தார்.
அகில இந்திய அளவில் 319 மதிப்பெண் எடுத்து 4-வது இடத்தை பெற்ற ஐதராபாத்தை சேர்ந்த மோஹித் சேகர் சுக்லா முதலிடத்தை சென்னை ஐ.ஐ.டி. மண்டலத்தில் முதலிடத்தை பெற்றிருக் கிறார்.