கல்வி/வேலைவாய்ப்பு

இந்திய வனப்பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் இந்திய வனப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தின் பயிற்சித் துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த மையத்தின் சார்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்களுக்கு வருகிற 17-ந்தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், 13-ந்தேதி (இன்று) முதல் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்ப விவரங்களை அவசியம் பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கட்டாயம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், 15-ந்தேதி மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.