கல்வி&வேலைவாய்ப்பு

‘நீட்’ தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

நீட் தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.

சென்னை,

நாடுமுழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத தமிழகத்தில் 2 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.

இந்த நிலையில் 'நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in -ல் வெளியிடப்படும். இத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் இருந்து தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த ஹால்டிக்கெட்டில் மாணவர்களின் பெயர், பதிவு எண், தேர்வு மையம், தேர்வு மையத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தேர்வு எழுத செல்லும் போது தேர்வறைக்கு செல்ல இந்த ஹால்டிக்கெட்டை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். தேர்வு மைய நுழைவுவாயிலில் தேர்வர்களை பலத்த சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். அதனால் முன்கூட்டியே விதி முறைகளை கடைப்பிடித்து சென்றால் தேர்வு நாளில் பதற்றமில்லாமல் தேர்வை எழுத எளிதாக இருக்கும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.