சென்னை,
அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் புதிதாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி தோற்றுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது. இந்த பதவி நேரடி நியமன முறை வாயிலாகவும், பணிமாற்றல் முறையிலும் நிரப்பப்படும். மாவட்ட முதன்மை நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதி பணிநியமன அதிகாரியாக இருப்பார். தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு கல்வித் தகுதி பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் அல்லது பி.சி.ஏ. பட்டப்படிப்பு ஆகும்.
மேலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் டிப்ளமோ பெற்றுள்ள பி.ஏ., பி.எஸ்..சி, பி.காம். பட்டதாரிகளும் இதற்கு தகுதியுடையவர் ஆவர். அடிப்படை கல்வித் தகுதியான பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியது அவசியம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.20,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியானது டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. டி.என்.பி.எஸ்.சி.யின் 2026 வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத்தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.