ஐஐடி மெட்ராஸ் 
கல்வி&வேலைவாய்ப்பு

பள்ளி மாணவர்களுக்காக இணையவழி சான்றிதழ் படிப்புகள்: சென்னை ஐஐடி அழைப்பு

8 வார காலத்திற்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புக்கான வகுப்புகள் ஜனவரி 11, 2027 அன்று தொடங்கும்.

சென்னை,

சென்னை ஐஐடி 'பள்ளி இணைப்பு'த் திட்டத்தின்கீழ் ஜனவரி 2027 தொகுப்பில் பள்ளிகள் மற்றும் மாணவ-மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பப்பதிவு தொடக்கம். இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

பள்ளி இணைப்பு

சென்னை ஐஐடி ‘பள்ளி இணைப்பு’ திட்டத்தின்கீழ் ஜனவரி 2027 தொகுப்புக்கான விண்ணப்ப பதிவை தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் தங்கள் வழக்கமான பாட திட்டங்களை தாண்டி அண்மைக்கால தொழில்நுட்பங்கள், பல்துறை சார்ந்த பாடங்கள், தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஐஐடி மெட்ராஸில் பயிலும் வாய்ப்பு

இந்தியா முழுவதும் 6,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 2.25 லட்சம் மாணவ- மாணவிகள் பதிவுசெய்துள்ளனர். இத்திட்டத்தில் மேலும் பள்ளிகள் இணைவதன் மூலம் தங்கள் மாணவர்கள் சென்னை ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி- ஆராய்ச்சி நிறுவனங்களில் கல்வி பயிலும் வாய்ப்புகளை பெற முடியும்.

இணையதளம்

8 வார காலத்திற்கான ஆன்லைன் சான்றிதழ் படிப்புக்கான வகுப்புகள் ஜனவரி 11, 2027 அன்று தொடங்கும். வரும் தொகுப்புக்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 8, 2027-ம் தேதியுடன் நிறைவடையும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணையதளத்தில் விண்ணப்ப பதிவு செய்யலாம் https://code.iitm.ac.in/schoolconnect/.

பள்ளி இணைப்பு கூட்டாண்மை, பாடத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு connect@study.iitm.ac.in -ல் தொடர்பு கொள்ளலாம். இப்பாட திட்டத்தில் பாடம் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500.

20 பாடங்கள்

9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். தற்போது வளர்ந்து வரும் மற்றும் பல்துறை படிப்புகளை உள்ளடக்கிய 20 பாடங்களை இந்த படிப்பு வழங்குகிறது. மாணவர்களின் பல்வேறு அறிவுத்திறன்களை கண்டறியவும், பிரபலமாகிவரும் தொழில்களை புரிந்துகொள்ளவும், தங்களது எதிர்கால கல்வி, தொழில் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்கவும் இப்படிப்பு உதவுகிறது.

சிறப்பு துறைகள்

மக்கள் தொடர்பகம் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் (Centre for Outreach and Digital Education- CODE) மூலம் இப்பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு தங்கள் வழக்கமான பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெறாத பாடங்கள். தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள முடிகிறது: இதன் மூலம் மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஆர்வமுள்ள படிப்புகளை கண்டறியவும், சிறப்பு துறைகள் குறித்த தொடக்கநிலை புரிதலையும் பெற முடியும்.

கூட்டு முயற்சி

இந்த முன்னோடி திட்டத்தின் நன்மைகள் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டுமென அழைப்பு விடுத்த திட்ட ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும்போது, "இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் இக்கூட்டாண்மையில் இடம்பெற வேண்டும் என்பதே சென்னை ஐஐடியின் விருப்பம், பள்ளிகளுக்கு இணைப்பு கட்டணமோ விண்ணப்ப பதிவு கட்டணமோ இல்லை. ஆர்வமுள்ள பள்ளிகள், தகவல் தொடர்புக்காக ஒரேயொரு ஆசிரியரை மட்டும் நியமித்து (Single Point of Contact SPOC), ஆன்லைன் மூலம் தங்கள விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். இக்கூட்டு முயற்சியில் இணையும் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை எளிதாக்கப்பட்டு, பாடத்திட்டம் ஒருங்கிணைக்கப்படும்" எனக்குறிப்பிட்டார்.

20 பாடங்கள் கற்று தரப்படுகின்றன

தரவு அறிவியலும் செயற்கை நுண்ணறிவும், மின்னணு அமைப்புகள், விண்வெளி பொறியியல், இணைய பாதுகாப்பு, கட்டிடக்கலையும் தயாரிப்பு வடிவமைப்பும், தடயவியல், விளையாட்டு தொழில்நுட்பம், டிஜிட்டல் மனிதவியல், சூழலியல், கணிதம், பொருளாதாரம் உள்ளிட்ட 20 பாடங்கள் கற்று தரப்படுகின்றன. இப்பாடங்களை சென்னை ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரிய உறுப்பினர்களும் நிபுணர்களும் கற்பிக்கின்றனர்.

கூடுதலாக கற்கும் வாய்ப்பு

இம்முயற்சியின் வாயிலாக, பள்ளி நிலையிலேயே தரமான கல்வி அனுபவத்தை பெறும் வாய்ப்பை சென்னை ஐஐடி வழங்குகிறது. இதன் மூலம் மாணவ- மாணவிகள் ஆரம்பகட்டத்திலேயே வளர்ந்துவரும் துறைகளுடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும், நிபுணர்களால் உருவாக்கப்பட்டு கற்பிக்கப்படும் பாடங்கள் மூலம் மாணவர்கள் வகுப்பறையில் கூடுதலாக கற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT