கல்வி&வேலைவாய்ப்பு

குரூப்-1, 1ஏ பதவிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

2013-ம் ஆண்டுக்கு பிறகு முதல் இடத்தில் ஆண் தேர்வர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

துணை கலெக்டர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், உதவி ஆணையர்கள்(வணிக வரிகள்), ஊரக மேம்பாடு உதவி இயக்குனர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், தொழிலாளர் உதவி ஆணையர்கள், வனத்துறை உதவி பாதுகாவலர் என குரூப்-1, 1ஏ பதவிகளில் காலியாக இருந்த 80 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1 லட்சத்து 81 ஆயிரத்து 422 பேர் எழுதிய நிலையில், அவர்களில் 1,801 பேர் முதன்மைத் தேர்வை எழுத தகுதி பெற்றிருந்தனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நடைபெற்றது. அந்த தேர்வை 1,568 பேர் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவை தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம்(மார்ச்) 30-ந்தேதி வெளியிட்டது.

அதில், தேர்வு எழுதியவர்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான 160 தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும், அவர்களுக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஏப்ரல் 15, 16-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது அதன்படி, நேர்முகத்தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தரவரிசைப் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டது. இந்த தரவரிசையில் எம்.சுப்பிரமணியன் முதல் இடத்தை பெற்றுள்ளார். 2-வது இடத்தில் எஸ்.திவ்யலட்சுமி, 3-வது இடத்தில் வி.பிரதீப் ஆகியோர் உள்ளனர். 2013-ம் ஆண்டுக்கு பிறகு முதல் இடத்தில் ஆண் தேர்வர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT