தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான கால அட்டவணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும்.
நேர்காணல் ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும். நேர்காணல் முடிந்த பிறகு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஜனவரி 25-ந்தேதி வெளியிடப்படும். அவர்களுக்கு ஜனவரி 27-ந்தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும்.இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும். பணிக்கான ஊதியம் ஊதிய நிலை 2-ல் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கு விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.100-ம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு மற்றும் காலிபணியிட விவரங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இந்த தகவலை அரசு வெளியிட்டு உள்ளது.