கல்வி&வேலைவாய்ப்பு

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை: எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

ஆர்.டி.இ. திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ. மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறமுடியும்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி (ஆர்.டி.இ.), தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்.டி.இ. திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 5.7 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் கல்வியாண்டு (2026–27) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்.டி.இ. திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ. மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

நலிந்த பிரிவினர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் rte.tnschools.gov.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.