கல்வி&வேலைவாய்ப்பு

தமிழ்மணம் திட்டம் : அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேர்வு செய்யப்படும் தமிழ் ஆசிரியர்கள் ஓர் ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். மாதம் ஒன்றுக்கு ரூ.1,25,000 ஊதியம் வழங்கப்படும்.

சென்னை,

அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆசிரியர் பணி

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

வெளிநாடுகளில் வாழும் அயலகத் தமிழர்களின் தலைமுறைகளுக்கு மொழி மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கற்பிக்கவும் திறன் மேம்படுத்தவும், தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலைகளை உலகளாவிய அளவில் பரப்பிட அயலகத் தமிழர் நலன் பொது (மறுவாழ்வு.2.(2)) துறையால் அரசாணை நிலை எண்.728, நாள் 24.11.2025 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையினை செயல்படுத்தும் வகையில், தமிழ் இணைய கல்விக்கழகம் வாயிலாக தமிழ் ஆசிரியர்களையும், கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக கலை ஆசிரியர்களையும் தேர்வு செய்து அளித்திட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கம்போடியா, இந்தோனேசியா, மலாவி, மியான்மர், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, மொரிஷியஸ், ரீயூனியன், குவாடலூப், மார்டினிக் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தமிழ் ஆசிரியர்களை அனுப்பிட கோரியுள்ளனர். ஆங்கிலம் நன்கு எழுத, பேசத் தெரிந்த 25 வயது நிரம்பிய, தகுதியும் திறமையும் வாய்ந்த தமிழ் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களைத் தமிழ் இணைய கல்விக்கழகத்தின் www.tamilvu.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, இயக்குநர், தமிழ் இணைய கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை - 600 025 என்ற முகவரிக்கு 30.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ரூ.1,25,000 ஊதியம்

தேர்வு செய்யப்படும் தமிழ் ஆசிரியர்கள் ஓர் ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். மாதம் ஒன்றுக்கு ரூ.1,25,000/- ஊதியமாக வழங்கப்படும். பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்டிற்கு ஒரு முறை சென்று திரும்புவதற்கான போக்குவரத்துச் செலவினம், விசா செலவினம், தங்குமிட செலவினங்களை நிபந்தனைகளுக்குட்பட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை வழங்கும். தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த முறையில் வகுப்புகள் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ் இணைய கல்விக்கழகத்தின் இயக்குநர் ச. அருண்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT