புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
மிகக்கடுமையான, கட்டுப்பாடுகள், சோதனைக்கு பின்னர் நடைபெற்ற இந்த தேர்வில் முறைகேடு நடந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவல் அதிர்ச்சியை கிளப்பியது. ராஜஸ்தான் மாநிலத்தில் 'கெஸ் பேப்பர்' என்ற பெயரில் வினாத்தாள் கசிந்ததும், அதில் இருந்து சுமார் 600 மதிப்பெண்களுக்கு மேல் வினாக்கள் ஒத்துப்போனதும் பேசுப்பொருளானது.
இதையடுத்து தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை உடனடியாக விசாரணையை தொடங்கியது. மத்திய முகமைகளுக்கு தேவையான ஆவணங்களை வழங்கி தேசிய தேர்வு முகமை இந்த விசாரணையை முடுக்கிவிட்டிருந்தது. அதுதொடர்பான விளக்கத்தை கடந்த 10-ந்தேதியன்று தெரிவித்து இருந்தது. இந்த சூழலில் சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி இருந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக என்.டி.ஏ. அதிரடியாக அறிவித்தது.
இந்த நிலையில் நீட் மறுதேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி நீட் மறுதேர்வை வருகிற ஜூன் 21-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது. இந்திய அரசின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ தகவல் வழிமுறைகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.