கல்வி&வேலைவாய்ப்பு

விடைத்தாள் திருத்தும் முறையில் தொழில்நுட்ப சிக்கல் எதுவும் இல்லை -சி.பி.எஸ்.இ

பொதுத்தேர்வு முடிந்த நிலையில் தற்போது விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகள் நடந்து வருகிறது.

சி.பி.எஸ்.இ. வாரியம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புகளில் படிக்கும் சுமார் 46 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வை நடத்துகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வு விடைத்தாள்களை திரைவழி மதிப்பிடும் முறை மூலம் மதிப்பீடு செய்யப்பட இருப்பதாக சி.பி.எஸ்.இ. முன்கூட்டியே அறிவித்தது.

இது மதிப்பிடும் செயல்முறையின் செயல் திறன், வெளிப்படைத் தன்மை மற்றும் துல்லியம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தது. அதன்படி, பொதுத்தேர்வு முடிந்த நிலையில் தற்போது விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த மதிப்பிடும் முறையில் கோளாறு இருப்பதாகவும், தாமதம் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விடைத் தாள்கள் மதிப்பிடும் முறையில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக வரும் செய்தி உண்மைகளுக்கு முற்றிலும் முரணானது. எனது மேற்பார்வையில் நடைபெறும் மதிப்பிடும் பணி மிகச் சிறப்பாகவும், இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட கூடுதல் சிறப்பாகவும் நடக்கிறது. இந்த மதிப்பிடும் முறையை செயல்படுத்தியதற்கு சி.பி.எஸ்.இ. வாரியம் மிகுந்த பெருமை கொள்கிறது. இதுதொடர்பாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. எனவே திட்டமிட்ட கால அட்டவணைப்படி மதிப்பிடும் பணிகள் முடிவடையும். ஏற்கனவே தெரிவித்ததுபோல, மே மாதம் 3-வது வாரத்தில் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.