கல்வி&வேலைவாய்ப்பு

'கியூட்' நுழைவுத்தேர்வில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன?

தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அறிவுறுத்தல்களாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை (யு.ஜி.) மற்றும் முதுகலை (பி.ஜி.) படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஆகும். இதனை பொதுப்பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அதாவது 'கியூட்' என்று சொல்கின்றனர். அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் நுழைவுத்தேர்வு வருகிற 11-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வு கணினி வழித்தேர்வாக நடக்கிறது. இதனை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த நிலையில் தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அறிவுறுத்தல்களாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவுறுத்தல்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் வெளிப்படையான தண்ணீர் பாட்டில்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் அணியும் பொருட்கள் அல்லது சின்னங்களை அணிந்துவரவும் அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும் அவற்றைச் சோதனையிடுவதற்கு ஏதுவாக, தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வருகை தரவேண்டும். வெளிர்நிறத்திலான எளிய ஆடைகளை அணிந்து வருவது விரும்பத்தக்கது. தேவைப்படும் பட்சத்தில் தேர்வர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து வரலாம். அவ்வாறு அணியும்போது பாதுகாப்பு சோதனைக்காக தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வருகை தரவேண்டும். மேலும் சாதாரண காலணிகள் அல்லது குட்டையான 'ஹீல்ஸ்' கொண்ட காலணிகள் அணிந்து வருவதும் விரும்பத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.