சென்னை,
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது..
வழக்கமாகத் தமிழ்நாடு பாடத்திட்டப் பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்தான் தொடங்குகின்றன. ஆனால், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்குகின்றன. இதனால், நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணை இன்னும் வெளியாகாதது மாணவர்களிடையே ஒருவித தயக்கத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ வட்டாரங்களின் தகவல்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் எந்த நேரத்திலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்களைப் பள்ளிகள் சரிபார்த்து சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவு செய்வதற்கு அக்டோபர் 21ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இறுதி நாளுக்குள்ளாகவோ அல்லது அதையொட்டிய நாட்களிலோ தேர்வு அட்டவணை வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான மற்றும் தேவையற்ற தகவல்களை நம்பி மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும், சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான [cbse.gov.in](https://www.cbse.gov.in) என்ற தளத்தை மட்டும் அவ்வப்போது பார்வையிடுமாறும் ஆசிரியர்களும் கல்வி நிபுணர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.