தலைப்புச் செய்திகள்

திருப்போரூர் கோவிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, காவல்துறை உதவியுடன் கோவில் நிலத்தை கையக்கப்படுத்தி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோவிலுக்கு சொந்தமாக சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. இதில் சுமார் 240 ஏக்கர் நிலம் தனிநபர்களிடம் இருப்பதாகவும் அதனை மீட்டு கோவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர சென்னையை சேர்ந்த வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கோவில் நிலத்தை மீட்க உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி தாமதமானதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து 21 நாட்களுக்குள் கோவில் நிலங்களை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து நிலத்தை மீட்க வந்தனர்.

அப்போது, தற்போது நிலங்களை வைத்திருப்பவர்கள், விவசாய சங்கத்தினர், சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகம் எடுத்து வந்த அறிவிப்பு பலகைகளை உடைத்து, பேனர்களை கிழித்து வாக்குவாதம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். ஆனால் முன்னதாக சுமார் 40 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று கோர்ட்டை நாடி உரிய உத்தரவு வாங்கி வர நேற்று வரை கால அவகாசம் அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டது. நேற்றுடன் கால அவகாசம் முடிந்ததால் நிலங்களை மீட்க நேற்று இரவு அதிகாரிகள் ஆலோசித்தனர்.

இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் அருகில் திருப்போரூர்-நெம்மேலி செல்லும் சாலையில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்கள் கார்த்திகேயன், ராஜலட்சுமி, ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோவில் ஊழியர்கள் உதவியுடன், காலை 6 மணிமுதல் ஒவ்வொரு இடமாக மீட்டு அங்கு கோவில் சார்பில் அறிவிப்பு பலகையை வைத்தனர்.

இன்று காலை மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 200 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் மீட்டது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட சுமார் 240 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.700 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.