சீரகத் தண்ணீரின் நன்மைகள் (AI Image) 
ஆரோக்கியம்

சீரகத் தண்ணீரின் நன்மைகள்.. தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

சீரகத்தை அதிக அளவிலோ, செறிவூட்டப்பட்ட மூலிகை பொருளாகவோ எடுத்துக்கொள்ள விரும்பினால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் பானம் செரிமானத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் உதவும் என்றும் பலர் நம்புகின்றனர். இதன் பயன்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

1. செரிமானத்திற்கு உதவுமா?

செரிமான பிரச்சினைகளை குறைப்பதற்கு சீரகம் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள இயற்கை வேதிப்பொருட்கள் செரிமான நொதிகளைத் தூண்டி உணவு எளிதில் செரிக்க உதவுகின்றன. எனினும் சாதாரண செரிமான கோளாறுகளுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்குமே தவிர, நாள்பட்ட அல்லது தீவிரமான செரிமான நோய்களை முழுமையாகக் குணப்படுத்தும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

சிலருக்கு சீரகத் தண்ணீர் குடிப்பது வயிற்றுக்கு இதமாக இருக்கலாம். தொடர்ந்து வயிறு உப்புசம், அசிடிட்டி அல்லது வயிற்றுவலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

2. உடல் எடையை குறைக்குமா?

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பலரும் சீரகத் தண்ணீரை குடிக்கின்றனர். சீரகம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கும் என்றும் நம்புகிறார்கள். ஆனால் சீரகத் தண்ணீர் மட்டும் குடிப்பதால் உடல் எடையோ வயிற்று கொழுப்போ குறையும் என்பதற்கு வலுவான அறிவியல் ஆதாரம் இல்லை. உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு உணவின் அளவு, உணவுத்தேர்வு, உடற்பயிற்சி, தூக்கம் போன்றவை முக்கியமானவை. சர்க்கரை சேர்த்த பானங்கள் பருகுவதற்கு பதிலாக சீரகத் தண்ணீரை குடிப்பது உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை தவிர்க்க உதவிடும்.

3. சீரகத் தண்ணீருடன் எலுமிச்சை சேர்க்கலாமா?

சீரகத் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்ப்பது நல்ல சுவையை தரும். அதில் சேர்க்கப்படும் எலுமிச்சைச் சாற்றின் அளவை பொறுத்து உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சி அளவும் மாறும். அதேவேளையில் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்சினை உள்ளவர்களுக்கு எலுமிச்சைச்சாறு சில நேரங்களில் அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.

4. தேன் சேர்த்து குடிக்கலாமா?

சீரகத் தண்ணீரில் சிறிதளவு தேன் சேர்த்தும் குடிக்கலாம். இது பானத்திற்கு இனிப்பு சுவையைத் தரும். ஆனால் தேனிலும் சர்க்கரையும் கலோரிகளும் உள்ளன. எனவே அதிக அளவு தேன் சேர்த்துக் குடிப்பது கூடுதல் கலோரிகள் உடலில் சேர வழிவகுக்கும். எனவே தேனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

5. தினமும் சீரகத் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானதா?

சமையலில் வழக்கமாக பயன்படுத்தும் அளவிலான சீரகம் பொதுவாக பாதுகாப்பானது. தினமும் மிதமான அளவில் சீரக தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானது, செரிமானம் மேம்படும். ஆனால் சீரகத்தை அதிக அளவிலோ, செறிவூட்டப்பட்ட மூலிகை பொருளாகவோ எடுத்துக்கொள்ள விரும்பினால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

இரண்டு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, தண்ணீர் ஒரு கப்பாக சுண்டியதும் வடிகட்டி விடவும். சிறிது சூடு ஆறியதும் வெதுவெதுப்பான பானமாக காலையில் அல்லது உணவுக்கு முன்பு என உங்களுக்கு விருப்பமான நேரத்தில் மிதமான அளவில் குடிக்கலாம்.

இதேபோல் ஒரு தேக்கரண்டி சீரகத்தை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி குடிக்கலாம்.

SCROLL FOR NEXT