அரிசியை கழுவி ஊறவைத்தல் (AI Image) 
ஆரோக்கியம்

அரிசியை ஊறவைத்து சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

அரிசியை நன்றாகக்கழுவி, சிறிது நேரம் ஊறவைத்து, அதிக தண்ணீரில் வேகவைத்து வடிப்பது ஆர்சனிக் அளவைக் குறைக்க உதவும்.

அரிசியை சமைப்பதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக அரிசியின் மேற்பரப்பில் உள்ள மாவுச்சத்து ஓரளவு நீங்கும். சமைத்த பிறகு சாதம் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வதும், சமைக்கும் நேரமும் குறையும்.

அரிசியை ஊறவைத்து, நன்றாக கழுவுவதன் மூலம் அதில் உள்ள ஆர்சனிக் என்ற நச்சுத் தனிமத்தின் அளவையும் ஓரளவு குறைக்க முடியும். ஆனால் ஊறவைப்பதால் மட்டும் பெரும்பாலான ஆர்சனிக் நீங்கிவிடாது. அரிசியை சமைக்கும் முறையும் முக்கியமானது. அதிக தண்ணீரில் அரிசியை வேகவைத்து, வெந்ததும் மீதமுள்ள தண்ணீரை வடித்து விடுவது ஆர்சனிக் அளவை குறைக்க உதவும் என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. அதேவேளையில் அரிசியில் சேர்க்கப்பட்டுள்ள சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் தண்ணீருடன் வெளியேறக்கூடும்.

பைடிக் அமிலம்

அரிசியில் பைடிக் அமிலம் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இந்த அமிலம் உடலில் இரும்பு, துத்தநாகம் போன்ற முக்கியமான தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. குறிப்பாக தவிடு நீக்கப்பட்ட வெள்ளை அரிசியை விட, தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியில் இந்த அமிலம் அதிகம் உள்ளது. பழுப்பு அரிசி மற்றும் பாரம்பரிய அரிசிகளிலும் இது அதிகமாக இருக்கும்.

அரிசியை ஊறவைப்பதன் மூலம் இந்த பைடிக் அமிலம் கணிசமாகக் குறைகிறது. இதனால், உடலில் இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களின் அளவு அதிகரிக்கிறது. குறிப்பாக, இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அரிசியை ஊறவைப்பதன் மூலம் அதில் உள்ள மாவுச்சத்து மென்மையாகிறது. இதனால், அரிசி எளிதில் செரிமானமாகிறது. இது குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் போன்ற செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும், அரிசியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கிறது.

அரிசி சாதத்தை தொடர்ந்து சாப்பிடலாமா?

அரிசியை நன்றாகக்கழுவி, சிறிது நேரம் ஊறவைத்து, அதிக தண்ணீரில் வேகவைத்து வடிப்பது ஆர்சனிக் அளவைக் குறைக்க உதவும். அதே நேரத்தில் அரிசியை மட்டுமே தொடர்ந்து சாப்பிடாமல் ஓட்ஸ், கோதுமை போன்ற பிற தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

SCROLL FOR NEXT